

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு, இலவசமாக வழங்கப்பட்ட குழல்விளக்கே காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற ராஜஸ்தான் சட்டசபை தேர்த லில் காங்கிரசிடம் இருந்த ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி தட்டிப் பறித்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக முன் வைத்த பல பிரச்சினைகளில், முன்னாள் முதல்வர் அசோக் கெலோட் படத்துடன் கூடிய ’சி.எப்.எல்’ எனப்படும் குழல் விளக்குகளும் ஒன்று.
காங்கிரஸ் அரசு கடந்த ஆண்டு மின்சாரக் கட்டணத்தை அதிக அளவில் உயர்த்தியது. இதனால் எழுந்த சர்ச்சையை சமாளிக்க, வீடுகளுக்கு 1.25 கோடி குழல் விளக்குகளை இலவசமாக வழங்க முடிவு செய்தது. இதன்படி, பட்ஜெட்டில் ரூ.278 கோடி ஒதுக்கப்பட்டு, சுமார் 90 சதவிகிதம் விளக்குகள் விநியோகிக்கப்பட்ட நிலையில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, மின் கட்டண உயர்வை முன்னி றுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்த வசுந்தரா ராஜே, அதற்கு ஆதாரமாக கெலோட்டின் படம் பதித்த குழல் விளக்குகளின் உறைகளை காண்பித்தார். கெலோட் தன் படத்தை அரசு செலவில் பதித்து சுயவிளம்பரம் செய்வதாக புகார் கூறினார்.
இதன் பலனாக தேர்தல் நடைபெற்ற 199 தொகுதிகளில், பாஜக 162 தொகுதிகளைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரசுக்கு வெறும் 21 தொகுதிகள் கிடைத்தது.
விநியோகிக்கப்படாமல் உள்ள சுமார் ஐந்து லட்சம் விளக்குகளை என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது பாஜக அரசு. குழல் விளக்குகளின் கவரில் அசோக் கெலோட் மற்றும் முன்னாள் மின்துறை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்தர் சிங் ஆகியோரின் படமும் பதிக்கப்பட்டிருப்பதுதான் காரணம்.
இதற்கிடையே, உறைகளை மாற்றி மீதம் உள்ள விளக்குகளை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் படி அசோக் கெலோட் கோரிக்கை வைத்துள்ளார். இதன் மொத்த மதிப்பு ரூபாய் 5.35 கோடியாகும். 15 வாட் மின்திறனுள்ள ஒவ் வொரு விளக்கும் ரூ.107 விலை கொண்டவை. குறைந்த மின்திறனில் அதிக அளவு ஒளியை வழங்கும் குழல் விளக்குகளின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக 2008-ல் மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. இதன் அடிப்படையில்தான் அசோக் கெலோட் அரசு, வீட்டுக்கு இரண்டு குழல் விளக்குகளை இலவசமாக வழங்கியது.
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 1.08 கோடி மின் இணைப்புகளில், வீட்டு இணைப்புகள் 80 லட்சம். அதில் 60 லட்சம் இணைப்புக ளுக்கு மட்டும் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இருபது லட்சம் வீடுகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.