மத்திய பட்ஜெட்டை தள்ளிவைக்க கோரும் மனு மீது ஜன.20-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

மத்திய பட்ஜெட்டை தள்ளிவைக்க கோரும் மனு மீது ஜன.20-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை
Updated on
1 min read

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை தள்ளிவைக்க கோரும் மனு தொடர்பாக உரிய சட்ட ஆவணங்களை சமர்பிக்குமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பான விசாரணை வரும் 20-ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு முதல் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ரயில்வே துறைக்கென தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட்டையும் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டை தேர்தல் முடியும் வரை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், '5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி 1-ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 1-ம் தேதி அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட் வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் தேர்தல் அறிவிக்கப்பட்ட மாநிலங்களுக்கு எந்தவொரு சலுகைகளும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பதை அரசு நிறுத்திக் கொள்ளும். எனவே தேர்தல் முடியும் வரை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ஒத்தி வைக்க வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள் இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என தெரிவித்தனர்.

மேலும் "மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வது எந்த விதியின் கீழ் மீறப்படுகிறது என்பதை மனுதாரர் சார்பில் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த மனுவுடன் வலுவான ஆதாரங்களோ, ஆவணங்களோ இணைக்கப்படவில்லை. எனவே உரிய ஆவணங்களை மனுதாரரின் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்ய வேண்டும்" என தெரிவித்து அடுத்த விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in