

ஆந்திராவில் ஹுத்ஹுத் புயல் தாக்கி கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியது தொடர்பாக பொறுப்பற்ற விதத்தில் கருத்து பகிர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி ஆந்திராவின் வணிக நகரமான விசாகப்பட்டினத்தில் ஹுத்ஹுத் புயல் கரையை கடந்ததில் அம்மாநிலத்தின் கடலோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்தனர். பல ஆயிரக் கோடிக்கணக்கில் அம்மாநிலத்தின் வளங்கள் சேதமடைந்தன. ஹுத்ஹுத் புயலால் அங்கு கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டது. விசாகப்பட்டினம் முற்றிலுமாக சிதைந்து போனது.
இந்த நிலையில் குண்டூரில் இறுதி ஆண்டு சட்டம் பயின்று வருபவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான ராகுல் ரெட்டி என்ற இளைஞர் தனது ஃபேஸ்புக் பக்கத்தின் நிலைப் பதிவில், "ஹுத்ஹுத் புயல் மூலம் ஏமாற்றியவர்கள் சரியாக இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். அதற்காக ஐ லவ் யூ ஹுத்ஹுத். கடவுள் இருக்கிறார்" என்று கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி கருத்து பகிர்ந்திருந்தார்.
இதனை அடுத்து ஹுத்ஹுத் புயலால் மாநிலம் கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்து மக்கள் அவதிப்படும் நிலையில் இப்படிப்பட்ட கருத்து பகிர்ந்ததற்காக ராகுல் ரெட்டியை ஆந்திர போலீஸார் புதன்கிழமை கைது செய்து அவர் மீது க்ரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து குற்றவியல் விசாரணை அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஹுத்ஹுத் புயலால் ஆந்திர கடலோர மக்கள் சோகத்தில் இருக்கும் நிலையில், ராகுல் ரெட்டியின் ஃபேஸ்புக் கருத்து பொறுப்பற்ற வகையிலும், மக்களுக்கு எதிரானதாகவும் உள்ளது.
மக்கள் மத்தியில் விரோதத்தையும், பல்வேறு தரப்பினரிடையில் வெறுப்பு உணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவரது பகிர்வு உள்ளதால் அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது" என்றார் .