

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இதுதொடர்பான கேள்விக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்த பதிலில், “ஊரக வேலை உறுதி திட்டத்தில் பயனடைவோரில் சிலர் ஆதார் எண் வழங்காமல் உள்ளனர். இவர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என கடந்த ஜனவரி 3-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும் மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் இந்த காலக்கெடு நீட்டிக்கப்படும்” என்றார்.
இதனிடையே, மத்திய அரசின் இந்த அறிவிக்கை மூலம் ஊரக வேலை திட்டத்தில் சேர ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து அமைச்சர் தோமர் கூறும்போது, “ஊரக வேலை திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாய மாக்கப்படவில்லை. எனினும் உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி அந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது” என்றார்.
இதுகுறித்து மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் ராம் கிருபாள் யாதவ் கூறும் போது, “ஊரக வேலை திட்டத்தை அமல்படுத்துவதில் வெளிப்படைத் தன்மையை உருவாக்குவதற்கு ஆதார் எண் பயன்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கான ஒதுக்கப்பட்ட நிதியை மோசடியாக பெற்று வந்த 56 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன” என்றார்.