

ஆம் ஆத்மி சுவரொட்டிகளில் மோடி படம் இடம்பெற்றுள்ளதற்கு எதிராக, டெல்லி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் படத்தை ஆம் ஆத்மி கட்சியின் சுவரொட்டிகளில் பயன்படுத்திய காரணத்திற்காக அக்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் கவுல் தெரிவித்தார்.
மேலும், ஆட்டோக்களில் மோடியின் படத்தை ஆம் ஆத்மி கட்சி ஒட்டியுள்ளதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் டெல்லி போலீஸில் பாஜக புகார் அளித்துள்ளது.
"அந்தப் படங்கள் அவதூறாகவும், ரசனையற்றதாகவும் உள்ளன. வாக்காளர்களுக்கு எந்த வகையிலும் விழிப்புணர்வூட்டும் வகையில் அவை இல்லை.
எங்கள் கட்சியையும், அதன் தலைவரையும் விமர்சிப்பதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல்" என்று அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரேடியோ விளம்பரங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவதாக அரவிந்த் கேஜ்ரிவால் மீது பாஜகவின் சட்டப் பிரிவு, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
இது குறித்து பாஜக சட்டப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அனில் சோனி கூறும்போது, "ஜன்லோக்பால் சட்டம் டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்யப்படாத போது அதை நிறைவேற்றியதாக தகவலைப் பரப்புகிறார்கள். மேலும் ஆம் ஆத்மி கட்சியினர் நம்பிக்கை தீர்மானத்தை எடுத்து வராமல் தாமாகவே ஆட்சியிலிருந்து ராஜினாமாவும் செய்தனர்.
லோக்பாலின் நிலையை டெல்லியின் துணை நிலை ஆளுநர் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். ஆம் ஆத்மி முதல்வரும் ஒருமனதாக ராஜினாமா செய்ய முடிவெடுத்ததைப் பற்றி எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை. யாரிடமிருந்தும் கேஜ்ரிவாலுக்கு நெருக்கடி ஏற்படவில்லை. அவராகவே முடிவெடுத்துதான் தேசிய அரசியலிலும் களமிறங்கியுள்ளார்" என்றார் அனில் சோனி.