பிஹாரில் பிளஸ் 2 தேர்வு மோசடி விவகாரம்: தேர்வுகள் வாரியத் தலைவர் பதவி விலகல்

பிஹாரில் பிளஸ் 2 தேர்வு மோசடி விவகாரம்: தேர்வுகள் வாரியத் தலைவர் பதவி விலகல்
Updated on
1 min read

பிஹாரில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மோசடி விவகாரத்தில், அம்மாநில பள்ளித் தேர்வுகள் வாரியத் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் சிங் பதவி விலகியுள்ளார்.

பிஹாரில் பள்ளித் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பல ஆண்டுகளாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. நடந்துமுடிந்த பிளஸ் 2 தேர்வில் தகுதியில்லாத பலர் முதலிடம் பெற்றிருப்பதை உள்ளூர் தொலைக்காட்சிச் ‘சேனல்’கள் அம்பலப்படுத்தின.

கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் முதலிடம் பெற்ற 13 பேருக்கு மட்டும் மறுதேர்வு நடத்திய தேர்வு வாரியம், செய்திகளில் பகிரங்கமாக அம்பலமான இரண்டு மாணவர்களின் தேர்ச்சியை மட்டும் ரத்து செய்தது. மோசடியில் ஈடுபட்ட மற்றவர்களை பாதுகாக்க வாரியம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதியுமாறு மாநில கல்வித்துறைக்கு உத்தரவிட்ட முதல்வர் நிதிஷ்குமார், மோசடி புகார் குறித்து காவல்துறையினர் முழுமையாக விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

முறைகேடு புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும், பதவியில் இருந்து ஏன் விலக்கிவைக்கக் கூடாது என்பதற்கும், 24 மணிநேரத்தில் பதில் தருமாறு பள்ளி தேர்வு வாரியத் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் சிங்குக்கு மாநில கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியது.

அதோடு, வாரிய அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் சென்ற மாநில மற்றும் சிஐடி போலீஸார் தேர்வு முடிவுகள் தொடர்பான ஆவணங்கள், லால்கேஷ்வர் சிங்கின் மடிகணினி, ‘ஸ்மார்ட்ஃபோன்’ அலுவலக கணினி உள்ளிட்டவற்றை கைப்பற்றிச் சென்றனர்.

முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க, லால்கேஷ்வர் சிங் சார்பில் அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட விசாரணைக் கமிட்டியையும் மாநில அரசு கலைத்துவிட்டது. தனக்கு எதிரான அழுத்தம் அதிகரித்து வந்த நிலையில், பிஹார் மாநில பள்ளித் தேர்வுகள் வாரியத் தலைவர் பதவியில் இருந்து லால்கேஷ்வர் பிரசாத் சிங் நேற்று ராஜினாமா செய்தார். அவரின் பதவி விலகல் கடிதம் கிடைக்கப்பெற்றதாக, மாநில கல்வி அமைச்சர் அசோக் சவுத்ரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in