

தென்னிந்தியர்கள் குறித்து பாஜகவின் தருண் விஜய் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தவர்கள் மட்டும்தான் இந்தியர்களா என்று ட்விட்டரில் சிதம்பரம் கேட்டுள்ளார்.
“தருண் விஜய் ‘நாங்கள் கருப்பர்களுடன் வாழ்கிறோம்’ என்று கூறும்போது நான் கேட்கிறேன் நாங்கள் என்பது யார்? இந்த நாங்கள் பாஜக, ஆர்.எஸ்.எஸ் மட்டுமா? இவர்கள் மட்டும்தான் இந்தியர்கள் என்கிறாரா தருண் விஜய்” என்று ட்விட்டரில் சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
தருண் விஜய் அல்ஜசீரா விவாதத்தின் போது நாங்கள் நிறவெறியர்கள் என்றால் எங்களைச் சுற்றிலும் தென்னிந்தியர்கள், கருப்பர்கள் உள்ளனர், நாங்கள் ஏன் அவர்களுடன் ஓன்று சேர்ந்து வாழ்கிறோம், என்று கூறியதுதான் கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து காங்கிரஸ் இதனை அதிர்ச்சிகரமானது என்று கூற திமுக வேடிக்கையானது என்று தெரிவித்துள்ளது.
ஆனால் தென்னிந்தியர்களைத் தான் கருப்பர்கள் என்று அழைக்கவில்லை என்றும் நான் ஏன் நம் பண்பாட்டை இழிவு படுத்த வேண்டும்? நான் மோசமாக வடிவமைத்த வாக்கியத்தைக் கொண்டு தவறான விளக்கம் அளிக்கும் முன் யோசிக்கவும், என்று தருண் விஜய் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.