

மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாவது:
2010-13-ம் ஆண்டில் இதய நோய், சுவாசக் கோளாறு, வயிற்றுப் போக்கு, புற்றுநோய் ஆகியவற்றால்தான் அதிக மரணம் சம்பவித்திருக்கிறது. எளிதில் குணப்படுத்தவியலாத புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள், நாட்பட்ட நுரையீரல் நோய்கள் போன்றவற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது. நகரமயமாதல், வாழ்வியல் முறை மாற்றம், புகையிலைப் பயன்பாடு, உடல் பருமன், முறையற்ற உணவுப் பழக்கம், குறைவான உடலுழைப்பு, மதுப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், காற்று மாசுபாடு போன்றவை இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
2004-06, 2010-13-ம் ஆண்டுகளில், இதயம், நுரையீரல், ஜீரண மண்டல நோய்கள் ஆகியவை உயிரிழப்புக்குக் காரணமான முதல் 10 நோய் பாதிப்புகளில் முக்கியமானவை. புற்றுநோயால் ஏற்படும் மரணத்தின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருப்பதை மாநில அரசுகள் சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.