

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், பாலிவுட் நடிகர் சஞ்ஜய் தத்துக்கு மீண்டும் 1 மாத காலம் பரோல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடிகர் சஞ்ஜய் தத், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த அக்.1- ஆம் தேதி பரோலில் வந்தார். 14- ஆம் தேதியுடன் பரோல் முடியவிருந்த நிலையில், நீதிமன்றத்தை அணுகி மேலும் 15 நாட்களுக்கு பரோலை நீட்டித்தார். ஒரு மாத காலத்திற்குப் பின்னர் கடந்த அக். 30-ஆம் தேதி சஞ்சய் தத், மீண்டும் புனே சிறைக்குச் சென்றார்.
ஒரு மாதமே கடந்த நிலையில், சஞ்சய் தத் தனது மனைவி மான்யதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, அவரை கவனிப்பதற்காக ஒரு மாத காலம் பரோல் கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்தார். நேற்று அவருக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று சிறை வாசலில் குழுமிய, தேசிய குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் கறுப்புக் கொடி காண்பித்து சஞ்சய் தத் பரோலில் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மும்பையில் இன்று காலையில் வெளியான பத்திரிகைகள் சிலவற்றில் மான்யதா சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படமாக வெளியானது. இதனையடுத்து தத்துக்கு வழங்கப்பட்ட பரோலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுத்துள்ளது.
இதனால், சஞ்சய் தத் பரோல் குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரம் மாநிலம் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 5 ஆண்டுகளாகக் குறைத்தது. சஞ்சய் தத் ஏற்கெனவே 18 மாதங்கள் தண்டனையை அனுபவித்து விட்டார்.