Published : 07 Mar 2017 08:48 AM
Last Updated : 07 Mar 2017 08:48 AM

இசைக்கு வாழ்வை அர்ப்பணித்த தைரியலட்சுமி!

பிரிதீவிராஜ் நடிப்பில் வெளியான ‘செல்லு லாய்ட்’ திரைப்படத்தில் ‘காற்றே... காற்றே...' பாடல் பாடியதன் மூலம் மலையாளத் திரையுலகில் கால் பதித்தவர் வைக்கம் விஜயலட்சுமி. இப்பாடல் பட்டி, தொட்டியெங்கும் இவரை அடையாளம் காட்டியது. ‘காற்றே…காற்றே..’ என இவர் இதே பாடலை தமிழிலும் பாட, தமிழ் இசைப்பிரியர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்தார் விஜயலட்சுமி.

மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் பாடி வந்த விஜயலட்சுமி, அண்மையில் வீரசிவாஜி படத்தில் பாடிய, “சொப்பன சுந்தரி நான் தானே…நான் சொப்பன லோகத்தின் தேன் தானே” பாடல் பலரும் முணுமுணுக்கும் பட்டியலில் இடம்பிடித்தது. தமிழில் பாகுபலி வரை இவரது பாடல்கள் இடம் பிடித்தது.

இவ்வளவு திறமையை பெற்றுள்ள வைக்கம் விஜயலட்சுமி தாயின் கருவறையில் இருக்கும்போதே, பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு, பிறவியிலேயே கண் பார்வையை முற்றிலுமாக இழந்தவர். 35 வயது ஆன இவர் இப்போது செய்துள்ள சாதனைக்கு கொடுத்த விலை மிக அதிகம்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வைக்கம் என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. முரளீதரன் - விமலா தம்பதியரின் ஒரே மகளான விஜயலட்சுமியின் குரு ஜேசுதாஸ். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தமிழகம், கேரளாவில் பல சபாக்களில் பாடி வந்தார். பார்வைக் குறைபாட்டினால் விஜயலட்சுமிக்கு திருமணம் தள்ளிக் கொண்டே செல்ல, அவரது பெற்றோர் இவரது திருமணம் நடக்க வேண்டி கேரளத்தில் போகாத கோவிலும் இல்லை. செய்யாத நேர்த்திக் கடனும் இல்லை. இந்நிலையில் தான் கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த இசைக்கலைஞர் சந்தோஷ், விஜயலட்சுமியை திருமணம் செய்ய முன்வந்தார்.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி நடந்தது. அப்போது விஜயலட்சுமி, “எனக்கெல்லாம் திருமணம் நடக்குமா என்று இருந்தேன். ஆனால் என்னைக் கண்ணாக பார்த்துக்கொள்ள கணவர் வந்துவிட்டார். கணவர் வழியில் கடவுள் எனக்குக் கண்ணைத் தந்துள்ளார். என் பெற்றோர்கள்தான் இதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்” என வந்திருந்தவர்களிடம் உருகினார்.

ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த சில தினங்களில் இருந்தே திரைப்படங்களில் பாடக் கூடாது, பொது மேடைகளில் பாடக் கூடாது என தொடர்ந்து கண்டிஷன்கள் போட்டுள்ளார் சந்தோஷ். ஓர் இசைப் பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்வதோடு உன் இசைப் பயணத்தை நிறுத்திக்கொள் என சந்தோஷ் போட்ட நிபந்தனை, விஜயலட்சுமியை நிலை குலைய வைத்தது. உடனே சில தினங்களுக்கு முன்பு, “எனக்கு மேடை தான் புத்துணர்வூட்டும் களம். அது இல்லாத வாழ்க்கை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த திருமணம் நின்று விட்டது” என அறிவித்தே விட்டார் வைக்கம் விஜயலட்சுமி. இதோ இப்போதும் இத்தனை பெரிய சாதனையை நிகழ்த்திக்கொண்டு அவரது இசைப் பயணம் தொடர்கிறது பெண்ணினத்தின் தைரியலட்சுமியாக!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x