Published : 23 Dec 2013 12:00 AM
Last Updated : 23 Dec 2013 12:00 AM

சொந்த ஊருக்குத் திரும்புங்கள்: முஸாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் அறிவுரை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மத கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் இருப்பவர்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர்கள் தொடர்ந்து முகாம்க ளில் தங்கியிருப்பதன் மூலம், தங்களுக்கு பயன் கிடைக்கும் என கலவரத்தைத் தூண்டியவர்கள் கருதுகிறார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏற்பட்ட மத கலவரத்தில் 62 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊரை விட்டு நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

முஸாபர்நகர் மற்றும் ஷாம்ளி பகுதிகளில் உள்ள 5 முகாம்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். தற்போது கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் இயல்புநிலை திரும்பிய போதும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளோர், தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம், இந்து மதத்தைச் சேர்ந்தோரை ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஷாம்ளி மாவட்டத்தின் மாலக்பூரில் உள்ள முகாமில் தங்கியிருந்தோரிடம் ராகுல் காந்தி பேசியதாவது: “முகாம்களில் தங்கி யுள்ளவர்கள் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பிப் போகக் கூடாது என்று கலவரத்தைத் தூண்டியவர்கள் விரும்புகின்றனர். ஏனெனில், நீங்கள் முகாமில் தங்கி யிருப்பது அவர்களுக்குத்தான் பயனளிக்கும். உங்களின் சொந்த கிராமத்திலிருந்து உங்களை பிரித்து வைப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். ஊருக்குத் திரும்புவதில் உங்களுக்கு அச்சம் இருந்தாலும், அதையும் தாண்டி நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்கேயே தொடர்ந்து இருப்பது உங்களின் எதிர்கால நலனுக்கு உகந்தது அல்ல” என்றார்.

முகாம்களில் தங்கியிருந்தோ ரிடம், “ஏன் சொந்த ஊருக்குச் செல்ல அச்சப்படுகிறீர்கள்? என்னென்ன நடவடிக்கைகளை அரசு எடுத்தால் வீட்டுக்குச் செல்வீர்கள்” என்று ராகுல் கேட்டார்.

அதற்கு, “ஊருக்குத் திரும்பிச் சென்றால் மீண்டும் தாக்கப்படுவோம் என்ற அச்சம் உள்ளது. கலவரத்தின் பின்னணியில் இருந்தவர்கள் அனைவரையும் முஸாபர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றினால் மட்டுமே, நாங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியும்” என்று முகாம்களில் தங்கியிருந்தோர் உறுதியாகத் தெரிவித்துவிட்டனர்.

பின்னர், குர்கன் பகுதியில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டி ருந்தவர்களையும் ராகுல் காந்தி சந்தித்தார். இந்த பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து முஸாபர் நகர், ஷாம்ளி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மேலும் சில முகாம்களையும் அவர் பார்வை யிட்டார். பர்னாலி முகாமில் முஸ்லிம் இளைஞர் ஒருவர், “நாங்கள் இந்தியர்கள் இல்லையா?” என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ராகுல், “நீங்களும் இந்தியர் கள்தான்” என்றார்.

பர்னாவ் முகாமில், குழந்தைக ளுடன் தரையில் அமர்ந்து ராகுல் காந்தி உரையாடினார். தங்களால் பள்ளிக்குப் போகமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை குழந்தைகள் மிகுந்த சோகத்துடன் அவரிடம் தெரிவித்தனர்.

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல முயன்றபோது, அவரைத் தடுத்த முகாம்வாசிகள் சிலர், இன்னும் சிறிதுநேரம் தங்களுடன் இருந்து பேச வேண்டும் என்று சாலையில் அமர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் கான்கேத் பகுதிக்குச் சென்ற ராகுல் காந்தி, கலவ ரத்தின்போது உயிரிழந்த ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ராஜ்வீர் என்பவ ரின் வீட்டுக்குச் சென்று, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நிலைமையை சீராக்க என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிப்பவர்களிடம் ராகுல் காந்தி கேட்டார்.

முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சமாஜ்வாதி கட்சி, அவர்களுக்கு சார்பாக செயல்படு கிறது, அதனால்தான் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை என்று அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்த ராகுல், “இந்த கலவரத்துக்கு காரணம் அரசியல்வாதிகள்தான் என்று இரு சமூகத்தினரும் கூறியுள்ளனர். இதன் மூலம் ஆதாயம் பெறப்போவது சில அரசியல்வாதிகள்தான். சமாஜ்வாதி கட்சி தலைமையிலான அரசின் நோக்கம் தூய்மையானதாக இல்லை. பிரித்தாளும் அரசியல் இருக்கும்வரை மக்களின் பிரச்சினைகள் தீராது” என்றார்.

ராகுலுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மதுசூதன் மிஸ்திரியும் உடன் சென்றார். முகாம்களில் வசிப்போருக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை மாநில அரசு சரிவர செய்து தரவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மையினர் பிரிவு தலைவர் குர்ஷித் அகமது சையத் கூறுகையில், “கலவரத்துக்குப் பிறகு குஜராத்தில் ஏற்பட்டது போன்ற மோசமான சூழல் இங்கு ஏற்படாது. எனவே, அனைவரும் தங்களின் ஊருக்கு தைரியமாக திரும்பிச் செல்ல வேண்டும். உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத வேறு கட்சி ஆட்சியில் உள்ளதால், ஒரு அளவுக்கு மேல் மத்திய அரசால் தலையிட முடியவில்லை” என்றார்.

குழந்தைகள் இறப்பு

சமீபத்தில் முஸாபர் நகர் முகாம்களில் தங்கியிருந்தோரின் 40 குழந்தைகள் அதிக குளிர் காரணமாக உயிரிழந்தன. இது தொடர்பாக உடனடியாக நடவ டிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. குழந்தைகள் இறந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதைத் தொடர்ந்து, குழந்தைகள் இறந்தது தொடர்பாக விசாரிக்க உயர் நிலைக் குழுவை மாநில அரசு அமைத்தது.இந்நிலையில், அந்த முகாம்க ளில் வசிப்போரை ராகுல் காந்தி சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x