‘காவி’ ஆட்சியில் காவலர்களும், காவல் நிலையங்களும் தாக்கப்படுகின்றன: யோகி அரசு மீது அகிலேஷ் கடும் குற்றச்சாட்டு

‘காவி’ ஆட்சியில் காவலர்களும், காவல் நிலையங்களும் தாக்கப்படுகின்றன: யோகி அரசு மீது அகிலேஷ் கடும் குற்றச்சாட்டு
Updated on
1 min read

காவி அணிந்தவர்களுக்கு காவலர்களையும், காவல் நிலையங்களையும் தாக்குவதற்கு சிறப்பு உரிமம் கிடைத்து விட்டது என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆட்சி மீது சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

ஆக்ராவில் போலீஸ்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பிற சட்டம் ஒழுங்கு சீர்குலைவை குறிப்பிட்டு முன்னாள் உ.பி.முதல்வர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“காவி கழுத்துக் குட்டை அணிபவர்கள் போலீஸ்காரர்களையும் அடித்து உதைக்கலாம் என்ற உரிமை மிகவும் கவலையளிக்கிறது. போலீஸ் நிலையங்களையும் இவர்கள் தாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது போல்தான் தெரிகிறது. கன்னவ்ஜில் போலீஸ்காரருக்கு அடி உதை. ஆக்ராவில் போலீஸ்காரர்களுடன் மோதல் போக்கு, அலஹாபாத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாங்கள் ஆட்சியில் இருந்த போது பதாவ்னில் சகோதரிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் கத்தின, கதறின. ஆனால் தற்போது அலஹாபாத் சம்பவம் கவனிக்க உகந்தது இல்லை போலும்” என்று சாடினார்.

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காயத்ரி பிரஜாபதியை ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறித்து அகிலேஷிடம் கேள்வி எழுப்பப் பட்ட போது, “அவருக்கு ஜாமீன் கிடைத்தது நல்லதுதான், இதில் என்ன தவறு இருக்கிறது?” என்றார்.

லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக யோகி அரசு விசாரணையை முடுக்கி விட்டது குறித்து கூறிய அகிலேஷ், “அவர்களுக்கு இந்தத் திட்டத்தில் பிரச்சினை இருந்தால் மேலும் கட்டப்படவிருக்கும் இந்தச் சாலைக்கு புதிய டெண்டர்களை அறிவித்துக் கொள்ளட்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in