

இந்தியாவில் ஊழல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றோ, தூய்மையான ராம ராஜ்ஜியத்தை உருவாக்கவோ நீதித்துறை உத்தரவுகள் போட முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எஸ். தாக்குர் தெரிவித்துள்ளார்.
வாய்ஸ் ஆஃப் இந்தியா என்ற என்.ஜி.ஓ.வைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்டிருந்த பொதுநல மனுவில், நடைபாதை ஆக்கிரமிப்புகளை நாடு முழுதும் அகற்ற உச்ச நீதிமன்றம் அதிகாரிகளுக்கு கறார் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணையில் இந்த பொதுநல மனுதாரர் நேரில் ஆஜராகி வாதிட்டார், அவர் மிகுந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையில் காணப்பட்டார், இதனையடுத்து ஒரு நேரத்தில் மனுதாரரை கோர்ட்டிலிருந்து அகற்ற பாதுகாப்பு அதிகாரியையும் அழைத்தார் தலைமை நீதிபதி தாக்குர்.
இந்த அமர்வில் தாக்குர் தவிர, நீதிபதிகள் கன்வில்கர், சந்திராசூட் ஆகிய நீதிபதிகளும் அடங்குவர், மூவரும் இத்தகைய மனு எந்த விதத்திலும் செல்லுபடியாகாது என்பதை தெரிவித்தனர்.
ஆனால் மனுதாரர் கோர்ட் அறையில் தன் தரப்பு வாதத்தை உரத்தக் குரலில் பேசினார், “குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிப்படைந்துள்ளன. அடிப்படை உரிமைகளை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். உங்களால் முடியாது என்றால் அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகள் இருந்து என்ன பயன்? அதனை பேசாமல் நீக்கி விடுங்கள்” என்று கத்தினார்.
இதற்கு நிதானமாக பதில் அளித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், “அமல்படுத்தக்கூடிய விஷயங்களை மட்டும்தான் நாங்கள் உத்தரவிட முடியும். இந்தியாவில் உள்ள அனைத்து நடைபாதை ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது...இந்தியாவில் ஊழல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது.. கொலைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது.. இந்தியா முழுதும் ராம ராஜ்ஜியமே இருக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது... இதெல்லாம் சாத்தியமா என்ன?” என்றார்.
இதற்கும் விடாமல் கேள்வி எழுப்பிய மனுதாரர், “ஒவ்வொரு நாளும் செய்தித்தாளில் பார்க்கிறோம் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் சிபிஐ-யிடமிருந்து நிலை அறிக்கை கேட்டது, அந்த வழக்கில் விவரங்களை கேட்டது என்று பார்க்கிறோம், நடைபாதை போன்ற பொதுவெளி ஆக்ரமிக்கப்படும் போது அடிப்படை உரிமைகளின் பயன் தான் என்ன?” என்றார்.
மனுவை தள்ளுபடி செய்யும் நிலையில் உள்ள உச்ச நீதிமன்றம் வழக்கை 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் ஜனவரி 2017-ல் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.