

டெல்லியில் வீடுகளில் மாதந் தோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 400 யூனிட் வரையி லான கட்டணத்தில் 50 சதவீதத்தை மாநில அரசே மானியமாக ஏற்கும்.
முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2014 வரை இந்த மானியம் கிடைக்கும். அதற்குப் பிறகு தணிக்கை அறிக்கை கிடைத்த பிறகு புதிய முடிவு எடுக்கப்படும் என்று நிருபர்களிடம் தெரிவித்தார் கேஜ்ரிவால்.
கட்டண ஒழுங்கு முறை ஆணையம் இருக்கும்போது மின் கட்டணத்தை குறைக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, மானியம் வழங்க அதிகாரம் இருக்கிறது என்றார்.
குடிநீருக்கு அடுத்தபடியாக, மின் கட்டணம் குறைப்பு தொடர்பாக தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் கேஜ்ரிவால். மின் கட்டணக் குறைப்பால் சுமார் 28 லட்சம் நுகர்வோர் பலன் அடைவார்கள். மின் கட்டண மானியச் சலுகை காரணமாக அரசுக்கு 3 மாதத்தில் ரூ. 61 கோடி செலவு ஆகும்.
வீடுகளுக்கு மாதந்தோறும் இலவசமாக 20000 லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கேஜ்ரிவால் திங்கள்கிழமை வெளியிட்டார்.
2 நாளில் அதிகபட்ச நன்மை செய்ய உறுதி
ஜனவரி 2ம் தேதி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ள நிலையில் கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அரசு பிழைக்குமோ பிழைக்காதோ என்பதில் எனக்கு கவலை இல்லை. காங்கிரஸ், பாஜகவை பற்றி உறுதிபட எதுவும் தெரியவில்லை. இந்த (ஆம் ஆத்மி) அரசுக்கு உள்ள கால அளவு 48 மணி நேரமே இருப்பதாக கருதி, நிர்வாகத்தை நடத்துகிறோம். இந்த காலத்துக்குள் மக்களுக்கு அதிகபட்சமாக என்ன நன்மை செய்ய முடியுமோ அதை செய்ய விரும்புகிறோம்.
டெல்லி சட்டப்பேரவையின் தலைவர் பதவி வேட்பாளராக கட்சி எம்எல்ஏ எம்.எஸ்..தீர். நிறுத்தப்படுவார்.
பேரவைக்கான இடைக்காலத் தலைவர் பதவியை பாஜக ஏன் ஏற்க முன்வரவில்லை என்பது தெரியவில்லை, அவையின் மூத்த உறுப்பினருக்குத் தான் இந்த பதவி செல்வது வழக்கமானது. இது பற்றிய கேள்வியை நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) பாஜகவிடம் கேட்க வேண்டும் என்றார் கேஜ்ரிவால்.
மின் நிறுவனங்களின் நிதி ஆய்வு
டெல்லியில் மின்சாரத்தை விநியோகிக்கும் பணியை கவனிக்கும் 3 தனியார் மின் நிறுவனங்களின் நிதி நிலைமை பற்றி தலைமை கணக்கு தணிக்கையாளர் மூலமாக ஆராய உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.
இந்த விவகாரம் பற்றி தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சசி காந்த் ஷர்மாவை முதல்வர் கேஜ்ரிவால் சந்தித்து விவாதித்தார்.
அது பற்றி கேஜ்ரிவால் கூறியதாவது:
3 தனியார் மின் நிறுவனங்களின் நிதி குறித்து அரசு தணிக்கை செய்ய அதிகாரம் உள்ளது. அதே நேரத்தில் தங்களது நிதி குறித்து அரசு தணிக்கையை ஏற்கத் தயாரா என மின் நிறுவனங்களிடம் கருத்து கேட்டுள்ளோம். புதன்கிழமைக்குள் தமது நிலையை அவை தெரிவிக்க வேண்டும்.அரசு தணிக்கையாளர், தணிக்கை செய்ய தயாராக இருக்கிறார். மின் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டனவா என்பது தணிக்கைக்குப் பிறகு தெரியவரும் என்றார் கேஜ்ரிவால்.