

அரசு சலுகைகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ஆதார் எண் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, அடுத்த உத்தரவு வரும் வரை, வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண்ணை சேகரிக்க வேண்டாம் என தேர்தல் ஆணையம், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், போலிகளைக் களையெடுப்பதற்கான என்இஆர்பிஏபி- திட்டத்தின் இதர வழிமுறைகள் தொடர்ந்து கையாளப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுவரை 13 கோடி வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர். இதில், 3 கோடிப்பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
முன்னதாக, தேசிய வாக்காளர் பட்டியல் தூய்மையாக்குதல் மற்றும் நம்பகமாக்குதல் திட்டத்தை (என்இஆர்பிஏபி) தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வந்தது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் இத்திட்டத்தை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியது. போலி வாக்காளர்களைக் களையெடுப்பதே இதன் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்ற உத்தரவு விவரம்:
அரசு நலத்திட்டங்களின் மூலம் சலுகைகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளது. மேலும், ஆதார் எண்ணுக்காக பெறப் பட்ட தனிப்பட்ட விவரங்கள் மற்றும் உயிரித்தரவுகளை (பயோ மெட்ரிக்) வேறு நிறுவனங்கள், அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்வதற்கும் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அந்த உத்தரவில், "ஆதார் எண்ணை, பொது விநியோகத் திட்டம், மண்ணெண் ணெய், சமையல் எரிவாயு விநியோகம் தவிர வேறு காரணங் களுக்காக பயன்படுத்தக் கூடாது. அதேசமயம் இந்த சலுகை களைப் பெறவும் ஆதார் எண் கட்டாயமல்ல. ஆதார் எண்ணுக் காக பெறப்பட்ட தனிப்பட்ட விவரங்கள், உயிரித் தரவுகளை வேறு எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது. குற்றப் புலனாய்வுகளுக் காக பயன்படுத்த அனுமதி உண்டு எனினும், அதற்கும் நீதிமன்றத் திடம் அனுமதி பெற வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மக்களுக்கு மத்திய அரசு விளம்பரப்படுத்த வேண்டும் என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஆதார் அட்டை திட்டம், அந்தரங்க விவரங்களை பாதுகாக்கும் உரிமைக்கு எதிரானது. அந்தரங்க விவரங் களை பாதுகாக்கும் உரிமை அடிப்படை உரிமையா எனத் தொடரப்பட்ட வழக்குகளை அரசியல் அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முந்தைய விசாரணை யின்போது, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, அந்தரங்க விவரங்களை பாதுகாக்கும் உரிமை அடிப்படை உரிமை அல்ல என வாதிட்டது குறிப்பிடத்தக்கது.