Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வித் தரம் பாதிப்பு: பிரதமர் வேதனை

நாட்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் கல்வியின் தரம் பாதிப்புக்குள்ளாவதாக பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்திருக்கிறார்.

இந்த பிரச்சினை பற்றி நன்கு அலசி என்ன செய்தால் தீர்வு கிடைக்கும் என்பதற்கான வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழுவும் கல்வித்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களும் கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் வைர விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் பேசியதாவது:

நமது கல்வியின் தரம் பற்றியும் கல்வி நிறுவனங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினை பற்றியும் சம்பந்தப்பட்டவர்களும் பல்கலைக்கழக மானியக் குழுவும் தீவிரமாக ஆராய்ந்து அதற்கு தீர்வு காணும் வழிமுறைகளை கண்டறியவேண்டும்.

நமது நாட்டில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் ஒன்றுகூட உலக அளவிலான சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது வேதனையானது. ஐ.ஐ.டி.களில் (இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள்) மட்டும் ஆசிரியர் பற்றாக்குறை 32 சதவீதமாக உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களிலும் இதே பிரச்சினை காணப்படுகிறது.

ஆராய்ச்சி சார்ந்த படிப்புக்கு பல்கலைக்கழகங்கள் முக்கியத் துவம் தரவேண்டும். இப்போதைய காலவளர்ச்சியில் பல துறைகள் சார்ந்ததாக ஆராய்ச்சிப் படிப்புகள் மாறிவிட்டன. எனவே நமது பல்கலைக்கழகங்களும் பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சிப் படிப்புகளை ஊக்குவிக்கவேண்டும்.

கல்வி கற்கும் சூழலானது சுதந்திரமானதாக இருக்கும் வகையில் பல்கலைக்கழக அமைப்பு முறை இருப்பது முக்கியமானது. பாடத்திட்டங்களை தாங்களாகவே நிர்ணயித்துக்கொள்ளும் சுதந் திரம் கிடைத்தால் உயர் கல்வி நிலையங்களில் ஆராய்ச்சிப் படிப்புகளும் கற்பித்தலும் மேம்பட்டதாக அமையும் என்பதுடன் புதுமைகளுக்கும் ஊக்கம் கிடைக்கும்.

உயர்கல்வித்துறைக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் பங்களிப்பு கிடைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆயினும் அதனிடம் இருந்து இன்னும் மேம்பட்ட பங்களிப்பு கிடைக்கவேண்டும் என்கிற எதிர் பார்ப்பு இருக்கிறது. உயர் கல்வியை வலுப்படுத்தும்போது அது வேலைவாய்ப்புக்கு உகந்ததாகவும் திட்டமிட்ட நோக்கத்துக்கு உதவுவதாகவும் இருக்கவேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

அண்மையில் தொடங்கப்பட்ட தேசிய உயர்கல்வி திட்டமானது மாநில உயர்கல்வி நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தருகிறது. மாநில அரசின் நிதியுதவியுடனான உயர்கல்வி நிறுவனங்கள் மூலமாகவே ஏராளமான மாணவர்கள் உயர்கல்வி பெறுகிறார்கள். தேசிய உயர்கல்வித் திட்டத்தின்படி 13-வது திட்டகால இறுதிக்குள் நாட்டில் 278 புதிய பல்கலைகள், 388 புதிய கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் 266 கல்லூரிகள் மாதிரி பட்ட கல்லூரிகளாக மாற்றப்பட உள்ளன.

மாநில பல்கலைக் கழகங்கள் மீது முக்கிய கவனம் செலுத்தி அவற்றின் கற்பித்தல் திறமையும் ஆராய்ச்சிப் படிப்புகளின் தரத்தையும் மேம்படுத்த ஆதரவு தருவது அவசியம். பல்கலைகளும், தொழில் நிறுவனங்களும் கூட்டாக செயல்பட்டால் ஆராய்ச்சி, மேம்பாடு வலுப்பெறும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x