

ஊழல் விவகாரங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன், உயிரைக் கொடுத்து ஊழலுக்கு எதிராக போராடுவேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஊழல்வாதிகள் யாரும் தப்பிக்க முடியாது, ஊழல் செய்த நபர் ஷீலா தீட்சித்தாக இருந்தாலும் சரி பாஜக உறுப்பினராக இருந்தாலும் சரி இல்லை ஆம் ஆத்மி உறுப்பினராக இருந்தாலும் சரி நடவடிக்கை எடுப்பது நிச்சயம் எனவும், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று, ஆம் ஆத்மி தேசிய செயற்குழு கூட்டம் 2-வது நாளாக நடைபெறுகிறது. கூட்டத்திற்குச் செல்லும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த கேஜ்ரிவால் இதனை தெரிவித்தார்.
ஆதாரம் அளித்தால் நடவடிக்கை:
பாஜக தலைவர் ஹர்ஷவர்த்தன், டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று தன்னிடம் கேட்டதாகவும் அதற்கு, ஷீலா தீட்சித்துக்கு எதிராக தகுந்த ஆதாரங்களை அளித்தால் சட்டப்படி நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என அவரிடம் தெரிவித்ததாகவும் கேஜ்ரிவால் கூறினார்.
ஊழல் புகார் அளிக்க உதவி எண்கள்:
மாநிலத்தில் நடைபெறும் லஞ்ச, ஊழல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கவும், அவற்றின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கவும் விரைவில் உதவி எண்கள் அறிவிக்கப்படும் என முதல்வர் கேஜ்ரிவால் உறுதியளித்தார்.
மாநில ஊழல் கண்காணிப்பு மையத்தை முந்தைய அரசு சரிவர இயங்க அனுமதிக்கவைல்லை என குற்றம் சாட்டிய கேஜ்ரிவால். அந்த அமைப்பினை வலுவாக்கும் பணியில் தனது அரசு ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். மொத்தம் உள்ள 30 ஆய்வாளர்கள் பணியிடங்களில் 11 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காலிப் பணியிடங்களை நிரப்பி அத்துறை வலுப்படுத்தப்படும் என்றார்.