

விமானப்படைக்கு சொந்தமான ரகசிய ஆவணங்களை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் பகிர்ந்துகொண்டதாக கைது செய்யப்பட்ட விமானப்படை அதிகாரியிடம் டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய விமானப்படையில் பணியாற்றி வந்தவர் கேரளாவைச் சேர்ந்த ரஞ்ஜீத். இவர் விமானப்படைக்கு சொந்தமான ரகசிய ஆவணங்கள் போன்றவற்றை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்,
டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் பஞ்சாபில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் தாக்குதலுக்கும் விமானப்படை ஊழியருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தான் எல்லையோரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட் விமானப் படைத்தளத்தினுள் ராணுவ வீரர்கள் உடையில் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனையடுத்து, பாதுகாப்புப்படை வீரர்கள் முழுவீச்சில் தீவிரவாதிகள் மீது அதிரடித் தாக்குதலில் இறங்கினர்.
கடும் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். வீரர்கள் மூவர் வீரமரணம் அடைந்தனர். விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அங்கு மீட்புப்பணிக்கு இடையே 11.30 மணிக்கு மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம்
நடைபெற்றது. பதுங்கி இருக்கு தீவிரவாதிகளுடன் வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.