கர்நாடகாவில் சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீது லாரி மோதி 13 பேர் பலி

கர்நாடகாவில் சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீது லாரி மோதி 13 பேர் பலி
Updated on
1 min read

கர்நாடகாவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த 3 வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிழந்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ரதுர்கா மாவட்டம் மோலகல்முரு அருகே ராம்பூர் உள்ளது. நேற்று காலை 11 மணியளவில் அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த 2 ஷேர் ஆட்டோக்கள் மற்றும் வேன் மீது, அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதியது. இந்த கோர‌ விபத்தில் ஆட்டோக்கள், வேனில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கினர். மேலும் சாலையோர கடைகளும், கட்டிடங்களும் வெகுவாக சேதமடைந்தன.

இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸாரும், மீட்பு குழுவினரும் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். ஷேர் ஆட்டோக்கள் மற்றும் வேனில் இருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக‌ உயிரிழந்தனர். படுகாயமடைந்த 29 பேரை மீட்டு பெல்லாரியில் உள்ள‌ தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனிடையே சித்ரதுர்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் ரங்கராஜன் சம்பவ இடத்துக்கு வந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது அருண் ரங்கராஜன் கூறும்போது, “பெல்லாரியில் இருந்து பெங்களூரு நோக்கி வேகமாக சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசார ணையில் தெரியவந்துள்ளது.

இதில் 3 வாகனங்களிலும் இருந்த 7 ஆண்கள், 4 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம்‌ 13 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 25-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 பேரின் உடல்நிலை மிகவும் அபாய நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய பெரும்பாலானோர் சித்ரதுர்காவை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களின் உடலை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஆட்டோ ஓட்டுநர், 2 பெண்கள், 3 ஆண்களின் உடலை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

விபத்து குறித்து ராம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி ஓட்டுநரை தேடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சாலை மிகவும் குறுக லாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே சாலை விரிவாக்கம் செய்வது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான முடிவை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும்” என்றார்.

வரிசையாக நின்றிருந்த வாகனங்கள் மீது லாரி மோதி இந்த விபத்து ஏற்பட்டதால், சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு உடல்கள் சிதறிக் கிடந்த‌ன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in