மக்களவைத் தேர்தல்: சத்தீஸ்கர் காங்கிரஸில் உட்கட்சி பூசல்

மக்களவைத் தேர்தல்: சத்தீஸ்கர் காங்கிரஸில் உட்கட்சி பூசல்
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தாக்குதலுக்கு பலியான முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி. சுக்லாவின் மகள் பிரதிபா பாண்டேவுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் அங்கு உட்கட்சி பூசல் நிலவுகிறது.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதன்படி, மஹாசமுந்த் தொகுதி முன்னாள் முதல்வர் அஜித் ஜோகிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்சிக் குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல ஆண்டுகளாக இந்தத் தொகுதியின் எம்.பி.யாக முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி. சுக்லா இருந்து வந்தார்.

இந்நிலையில், இந்தத் தொகுதியை அவரது மகள் பிரதிபாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

நக்சல் தாக்குதலில் பலியான காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மாவின் மகன் தீபக் கர்மாவுக்கு பஸ்தார் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சம்பவத்தில் பலியான சுக்லாவின் மகளுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் விதான் மிஷ்ரா கூறியுள்ளார். அதேநேரம் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, நக்சல் தாக்குதலில் காயமடைந்த மோதிலால் சாஹு, மஹா சமுந்த் தொகுதி தனக்கு ஒதுக்கப் படாததைக் கண்டித்து கட்சி யிலிருந்து விலகி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in