

பாகிஸ்தானுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டதை விமர்சித்துள்ள காங்கிரஸ், பிரதமர் நரேந்திர மோடி தனது சாகச செயல்களை தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் காட்ட வேண்டாம் என்று காட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் பயணித்திலிருந்த தாம் பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்திக்கப் போவதாக தனது ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, டெல்லி திரும்பும் வழியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க லாகூர் சென்றார்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணீஷ் திவாரி கூறும்போது, "இந்தச் சந்திப்பு திட்டமிடப்படாதது என்றால், அது முற்றிலும் முட்டாள்தனமான, அபத்தமான ஒன்று.
இந்தியாவின் தேசப் பாதுகாப்பில் அவர் தனது சாகச வேலைகளை காட்ட வேண்டாம். அத்தகைய சாகசத்தை நாட்டு மக்களுக்கு செய்து காட்டவே இந்த 'திடீர்' பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பளர்களுள் ஒருவரான அஜய் குமார், "நாட்டின் பிரதமராக இருக்கும் அவர் இத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை ட்விட்டரில் வெளியிடக் கூடாது. அவ்வளவு நல்ல முறையில் பாகிஸ்தானுக்கு இந்தியாவுக்குமான உறவு இல்லை. எனவே இதில் ஏன் இத்தகைய விளையாட்டு" என்று கூறியுள்ளார்.
ஆனால், பிரதமரின் இந்த திடீர் பாகிஸ்தான் பயணத்தை பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.