

ஃப்ரீடம் 251 என்ற ரூ.251-க்கு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்துவதாக அறிவித்த ரிங்கிங்பெல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மோஹித் கோயல் மோசடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
காஸியாபாத்தில் உள்ள அயாம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ரிங்கிங் பெல்ஸ் தங்களிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்ததையடுத்து மோஹித் கோயல் கைது செய்யப்பட்டார்.
இதில் மோஹித் கோயலை விசாரிக்க அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காஸியாபாத் காவல்துறை உயரதிகாரி மணீஷ் மிஷ்ரா தெரிவித்தார்.
அதாவது, 2015-ல் ரிங்கிங்பெல்ஸ் நிறுவனத்தின் ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போன்களுக்கான விநியோக உரிமை அளிப்பதாக அயாம் நிறுவனத்தை மோஹித் கோயல் தொடர்ந்து அணுகி வந்துள்ளார்.
“நாங்கள் ஆர்.டி.ஜி.எஸ். முறையில் ரிங்கிங்பெல்ஸுக்கு ரூ.30 லட்சம் தொகை செலுத்தினோம். ஆனால் 13 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ரிங்கிங்பெல்ஸ் விநியோகித்தது” என்று அயாம் நிறுவனம் புகாரில் தெரிவித்திருந்தது.
மேலும் மீதிப் பணத்தை கேட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று ரிங்கிங்பெல்ஸ் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.