

நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கும் பாஜகவுக்கு, சிறையில் உள்ளவர்களின் ஆதரவு தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா தற்போது சிறையில் உள்ளார்.
சவுதாலாவின் இளைய சகோதரர் பிரதாப் சிங் கடந்த 1-ஆம் தேதி மரணமடைந்ததை அடுத்து, இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஜாமீனில் வெளிவந்த சவுதாலா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் தன்னால் சிறையில் இருந்துகூட மக்களின் வாக்குகளை பெற்று முதல்வர் ஆகும் தகுதி இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஹரியாணா மாநிலம் ஹிசரில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, சவுதாலா பெயரை குறிப்பிடாமல், அவரை கடுமையாக தாக்கிப் பேசினார்.
அவர் பேசும்போது, "சிலர் பொய்யை பரப்பி வருகின்றனர். சிறையில் இருந்துகொண்டே முதல்வர் ஆகலாம் என்று கனவு காணுகின்றனர்.
சிறையில் உள்ளவரின் ஆதரவோடு வேட்பாளர்கள் வெற்றி பெறலாம் என்று கூறுகின்றனர். ஆனால், எனது அரசுக்கு நாட்டு மக்களில் பெரும் ஆதரவு உள்ளது. சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எனது அரசுக்கு தேவைப்படாது.
சிறந்த அரசு அமைக்கவே பாஜக பணியாற்றி வருகிறது. எனது ஆதரவாளர்கள் புரளி பேசுபவர்கள் இல்லை. ஆனால், இங்கு ஆளும் கட்சி புரளி செய்வதைத்தான் வேலையாக செய்கிறது.
ஹரியாணா முதல்வர் ஹூடா தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுவிட்டார். சோனியா காந்தி மருமகனின் நில மோசடியில் துணை போன ஹூடாவுக்கு, மாநில மக்கள் என்ன கைமாறு செய்வார்கள் என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும். இவர்கள் இத்தனை ஆண்டு காலம் செய்யாததை பாஜக சில மாதங்களில் செய்துவிட்டது.
மத்திய அரசு ஹரியாணா மாநிலத்துக்காக தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டே இதற்குச் சான்று. இவர்கள் இத்தனை ஆண்டு காலம் சாதிக்காததை நாங்கள் சாதித்துவிட்டோம்.
தூய்மையான இந்தியா (ஸ்வச் பாரத்), அக்டோபர் 2-ல் ஆரம்பிக்கப்பட்டது. நவம்பர் 14-ஆம் தேதில் ஜவஹர்லால் நேருவின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு செல்லும் திட்டம் உள்ளது. நவம்பர் 19-ஆம் தேதி, இந்திரா காந்தியின் பிறந்த நாளில் இந்தத் திட்டம் அனைத்து அங்கன்வாடிகளுக்கு எடுத்து செல்லும் நோக்கமும் உள்ளது.
தற்போதைய நிலையில், காங்கிரஸுக்கு எந்த வேலையும் இல்லை. ஆகவே, அவர்கள் அனைவரும் தூய்மையான இந்தியா திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
பெண் ஒருவரின் தலைமை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இங்கு பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கும் ஓர் அரசு இப்போது தேவை. இனியும் இங்கு பலாத்கார சம்பவங்கள் தொடரக் கூடாது" என்றார்.