

சட்ட விரோத பணப்பரிமாற்றம் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ‘மணி லாண்டரிங்’ சந்தேகத்தின் பேரில் 13 நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.
அதாவது வர்த்தகம் என்ற போர்வையிலேயே கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயற்சி செய்வது என்ற அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் ரூ.24.64 கோடி இறக்கு மதி வர்த்தக நடவடிக்கையின் பேரில் ரூ.2,250 கோடி தொகை அயல்நாட்டு நிறுவனங்கள் பெயருக்கு வங்கிகள் மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, ஹைதராபாத் ஸ்டேட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றில் 2015-16-ல் இவ்வகையான 1,211-க்கும் மேற்பட்ட பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஏற்றுமதி-இறக்குமதி சமிக்ஞை பதிவுகளைப் பயன்படுத்தி கற்பனையான முகவரிகளில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் வங்கிகளில் பல்வேறு நடப்புக் கணக்குகளை வைத்துள்ளனர். இந்த நிறுவனங்கள் நவசேவா மற்றும் மும்பை துறைமுகம் வாயிலாக 2015-16-ல் சில்லறை சரக்கு இறக்குமதி செய்துள்ளன.
ஸ்டெல்கன் இன்ஃப்ராடெல், அபோலா எண்டர்பிரைசஸ், குந்தன் டிரேடிங், டிஸ்னி இண்டெர்னேஷனல், ஆனெக் டிரேடிங், லுபீஸ் எண்டர்பிரைசஸ், பவன் எண்டர்பிரைசஸ், லெமன் டிரேடிங் கம்பெனி, படிலைட் டிரேடர்ஸ், ஃபைன் டச் இம்பெக்ஸ், அஸ்யூர் எண்டர்பிரைசஸ், சீபேர்ட் எண்டர்பிரைசஸ், மற்றும் ஐகானிக் எண்டர்பிரைசஸ் ஆகிய இந்த நிறுவனங்கள் இத்தகைய சட்ட விரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அடையாளம் கண்டுள்ளது.
சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்கிகள் சரக்கிற்கு பணம் செலுத்துவதற்காக போலி நுழைவு ரசீதுகளை இந்நிறுவனங்கள் தயாரித்து அளித்துள்ளன. இந்த பில்களில் உள்ள விவரங்கள் கஸ்டம்ஸ் இறக்குமதி தரவுடன் ஒத்துப் போகவில்லை. மேலும் இன்வாய்ஸ் எண், சப்ளை செய்தவர் பெயர், இறக்குமதி செய்த பொருட்களை பற்றிய விவரங்கள், அதன் மதிப்பு ஆகியவை கஸ்டம்ஸ் தரவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தன. சில வேளைகளில் ஒரே நுழைவு ரசீது பல்வேறு வங்கிகளிலும் சமர்ப்பிக்கப்பட்டு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் சம்பந்தமில்லாத இறக்குமதியாளர் பெயர் வங்கிக்கு அளிக்கப்பட்டு பணம் அயல்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
“முதற்கட்ட பார்வைகளின்படி, வங்கிகள் இது குறித்து போதிய சிரத்தையுடன் செயல்படவில்லை. பணத்தை அளிக்கும் முன் பில் ஆஃப் எண்ட்ரியின் உண்மைத்தன்மை குறித்து எந்த ஒரு சரிபார்ப்பு நடவடிக்கைகளையும் வங்கிகள் மேற்கொள்ளவில்லை” என்று வங்கி அதிகாரிகளை குற்றம்சாட்டியுள்ளது சிபிஐ முதல் தகவல் அறிக்கை.