Last Updated : 21 Sep, 2016 04:56 PM

 

Published : 21 Sep 2016 04:56 PM
Last Updated : 21 Sep 2016 04:56 PM

ஊழல் புகாரில் கேஜ்ரிவால் பெயர் சேர்ப்பு: பிரதமர் மோடி மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லி மகளிர் ஆணைய பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், முதல்வர் கேஜ்ரிவாலின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடியை, கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி மகளிர் ஆணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு, 91 பேர் நியமனம் செய்யப்பட்டதில், விதிமுறைகள் மீறப்பட்டதாக, ஆணையத்தின் தற்போதைய தலைவர் ஸ்வாதி மாலிவால் மீது, முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான, பர்கா சிங், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ஸ்வாதி மட்டுமல்லாது, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

ஊழல் தடுப்புப் பிரிவு தலைவர் எம்.கே.மீனா இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். புகாரின் அடிப்படையில், கேஜ்ரிவாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், ஊழல் தடுப்புப் பிரிவின் பங்கு எதுவுமில்லை என, அவர் கூறினார்.

இதுகுறித்து டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறும்போது, ‘என் பெயர் ஏன் சேர்க்கப்பட்டது எனத் தெரியவில்லை. பிரதமரின் ஒப்புதல் இல்லாமல், ஒரு முதல்வரின் பெயர், எஃப்ஐஆரில் இடம் பெற முடியாது. என் மீது என்ன குற்றச்சாட்டு என்பது குறித்து, புகாரில் ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. இப்பிரச்சினையை விவாதிக்க டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும்’ என்றார்.

இதற்கிடையே, தன் மீதான புகாரை மறுத்த ஸ்வாதி மாலிவால், ‘நியமனங்கள் எல்லாம் முறைப்படி நடந்துள்ளன. என்னை பணிபுரிய விடாமல் திசை திருப்பவே இவ்வாறு வழக்கு தொடுக்கின்றனர். நான் ராணுவ வீரரின் மகள். யாரும் என்னை அச்சுறுத்த முடியாது. நான் ஒரு ரூபாய் ஊழல் செய்ததாக யாராவது நிரூபித்தால் கூட தற்கொலை செய்துகொள்வேன்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x