

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு, மாநில அரசுகள் உளவுத் தகவல்களை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 10 ஆண்டு களுக்குப் பிறகு கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் மோடி கூறியதாவது:
உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான சவால்கள் என்னென்ன, அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசும் மாநில அரசுகளும் பரஸ்பரம் எப்படி ஒத்துழைக்க முடியும் என்பது பற்றியும் ஆலோசிக்கப்படும்.
உள்நாட்டு பாதுகாப்புக்கான அச்சுறுத்தல், சவால்களை எதிர் கொள்ள நம் நாட்டை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மாநில அரசுகளும் மத்திய அரசும் உளவுத் தகவல்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளாதவரை உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த முடியாது. இந்த விவகாரத்தில் நாம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பதுடன் உளவுத் தகவல்களை திரட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நெருங்கிய ஒத்துழைப்பு இருந்தால், உறவு வலுப்படுவதுடன் நாட்டு மக்களுக்கும் சிறந்த எதிர்காலம் அமையும். மத்திய, மாநில அரசுகள் தோளோடு தோள் கொடுத்து பணியாற்றினால்தான் நாடு சிறப்பான வளர்ச்சியை எட்டும்.
சில சந்தர்ப்பங்களில்தான் மாநில முதல்வர்களும் பிரதமரும் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கூட்டாட்சிக்கு உதாரண மாக விளங்கும் இந்த கவுன்சில், மக்கள் நலன் மற்றும் அவர்களது பிரச்சினைகளை விவாதித்து நல்ல முடிவு எடுக்கும் அமைப்பாக விளங்கு கிறது. மனதில் பட்டதை வெளிப்படை யாக சொல்வதற்கான வாய்ப்பை இந்த கவுன்சில் தருகிறது. எனவே தமது கருத்துகள், யோசனைகளை அனை வரும் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யும்போது நாட்டு மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
14-வது நிதிக்குழுவின் பரிந்துரை களை ஏற்றுக்கொண்டதன் மூலம், மத்திய வரி வருவாயில் மாநிலங்களின் பங்கு 32-ல் இருந்து 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு 14-வது நிதிக் குழுவின் காலத்தில் ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் கோடி கிடைக்கும். இது கடந்த காலத்தைவிட கணிசமான அளவுக்கு அதிகமாகும்.
இயற்கை வளங்களை ஏலம் விடுவதால் கிடைக்கும் வருவாயிலும் மாநிலங்களின் உரிமைகள் மனதில் கொள்ளப்படுகின்றன. வரும் ஆண்டு களில் நிலக்கரி வயல்கள் ஏலம் மூலம் மாநிலங்களுக்கு ரூ.3.35 லட்சம் கோடி கிடைக்கும். மற்ற சுரங்கங்களை ஏலம் விடுவதால் கூடுதலாக ரூ.18,000 கோடி கிடைக்கும்.
நம் நாட்டில் இப்போது சுமார் 30 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். இது நமக்கு மிகப்பெரிய சொத்து ஆகும். எனவே, இன்றைய சர்வதேச போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அவர்களது திறமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் உள்ள 128 கோடி மக்கள் தொகையில் இதுவரை 102 கோடி பேருக்கு (79%) ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. உங்களது ஆதரவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலில் அனைத்து மாநில முதல் வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், 17 மத்திய அமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கவுன்சிலின் கூட்டம் கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்றது.