

நேபாளத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியதற்காக நேபாள பொறுப்பு பிரதமரும் நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவருமான பிரசன்டாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பதவியை ராஜினாமா செய்துள்ள பிரசன்டா, புதிய பிரதமர் பொறுப்பேற்றவுடன் முறைப்படி அந்த பதவியிலிருந்து விலக உள்ளார்.
பிரசன்டாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்தில் ஜனநாயகத்தை காக்கும் ஒரு முயற்சியாக அந்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தததற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மே 14-ம் தேதி நடைபெற்றது. சரியாக 20 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற இந்த தேர்தலில் லட்சக்கணக்கான நேபாள மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்தத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க இந்திய அரசின் உதவியை நேபாள பிரதமர் பிரசன்டா ஏற்கனவே கோரியிருந்தார். இந்த நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேபாள பிரதமராக பிரசன்டா பொறுப்பேற்றார். அடுத்த ஆண்டு நேபாளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது அதுவரை நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேபூவா உடன் சுழற்சி முறையில் பிரதமர் பதவியை வகிப்பது என்று இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.அந்த ஒப்பந்த்தின் அடிப்படையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் பிரதமர் பதவியை பிரசன்டா ராஜினாமா செய்தார்.