Last Updated : 12 Jan, 2017 02:35 PM

 

Published : 12 Jan 2017 02:35 PM
Last Updated : 12 Jan 2017 02:35 PM

உ.பி தேர்தலிலும் உவைஸி தனித்து போட்டி: முசாபர்நகரில் பிரச்சாரம் துவக்குகிறார்

ஆந்திராவின் பிராந்தியக் கட்சியான ஏஐஎம்ஐஎம் (அகில இந்திய மஜ்லீஸ் எ இத்தஹாத் உல் முஸ்லிமீன்) கட்சி உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது.

இதன் தலைவரான அசாசுத்தீன் உவைஸி நாளை ஜனவரி 13-ல் முசாபர்நகரில் இருந்து பிரச்சாரம் துவக்குகிறார்.

ஆந்திராவை மையமாக வைத்து துவங்கிய முஸ்லீம் கட்சியாகக் கருதப்படுவது ஏஐஎம்ஐஎம். இந்த கட்சி முதன்முறையாக ஆந்திராவிற்கு வெளியே மகராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் பத்து தொகுதிகளில் போட்டியிட்டது.

இதில் கிடைத்த இரு தொகுதிகளால் உற்சாகம் அடைந்த உவைஸி, மற்ற மாநிலங்களிலும் போட்டியிட்டு வருகிறார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டவர் மீது பாஜகவிற்கு சாதகமாக முஸ்லீம் வாக்குகளை பிரிப்பதாகப் புகார் எழுந்தது. எனினும், அவரது கட்சி போட்டியிட்ட ஆறு தொகுதியிலும் டெபாசிட் இழக்க வேண்டியதாயிற்று.

இந்த நிலையில் தற்போது உபி சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார். உ.பி.யின் மேற்குப்பகுதிக்காக 11 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதற்கானப் பிரச்சாரத்தையும் உவைஸி நாளை (சனிக்கிழமை) முசாபர்நகரின் கைரானா தொகுதியில் துவக்குகிறார்.

இது குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் உபி மாநில தலைவரான சவுகத் அலி, ‘தி இந்து’விடம் கூறுகையில், "எங்கள் கட்சி போட்டியினால் உபி முஸ்லீம்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏனெனில், இங்கு முதன்முறையான தலைவராக உவைஸி முஸ்லீம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளார்.

பாஜக மற்றும் சமாஜ்வாதி ஆகிய இருகட்சிகளும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். செல்வாக்கு குறைந்து விட்ட மாயாவதி தாம் ஆட்சியை பிடித்து விடலாம் எனக் கனவு காண்கிறார். இது பாஜகவிற்கு சாதகமான சூழலாகத் தெரிவதால் அதை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க நமது கட்சி தனித்து போட்டியிடுகிறது" எனத் தெரிவித்தார்.

கடந்த 2013-ல் உபியின் முசாபர் நகரில் பெரிய மதக்கலவரம் மூண்டது. இதில், 60 பேர் உயிரிழந்ததுடன், 50,000 குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. இவர்களில் சுமார் 5000 குடும்பங்கள் கலவரம் அடங்கிய பின்பும் திரும்பவில்லை எனப் புகார் உள்ளது. இதனால், குஜராத் கலவரத்தைப் போல், உபியின் முசாபர்நகர் மதக்கலவரமும் தேசிய அரசியலில் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இது உத்தரப்பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகளால், முக்கிய பிரச்சனையாக முன்னிறுத்தப்பட உள்ளது. உபி உட்பட ஐந்து மாநிலங்களுக்கு வரும் பிப்ரவரி 4 முதல் மார்ச் 8 வரை தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. இதன், ஏழுகட்ட தேர்தலில் மேற்குப்பகுதியில் உள்ள 73 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக பிப்ரவரி 11-ல் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x