

சந்திர கிரகணம் நாளை நிகழ்வதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை சாத்தப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சந்திர கிரகணம் நாளை மாலை 4.45-க்கு தொடங்கி இரவு 7.05 மணி வரை நீடிக்கும். இதனால் ஆகம விதிகளின்படி முன்கூட்டியே திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட உள்ளது.
இதுகுறித்து நேற்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சந்திர கிரகணம் காரணமாக, புதன்கிழமை காலை 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு இரவு 10.30 மணியிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
முன்னதாக புதன்கிழமை காலை 6.30 மணியிலிருந்து காலை 9.30 மணி வரை 3 மணி நேரம் சர்வ தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கிரகணம் காரணமாக புதன்கிழமை நடைபெறும் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.