

16 ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட உள்ளதாக அறிவித்த இரோம் ஷர்மிளாவுக்கு இன்று இம்பால் உயர் நீதிமன்றம் ரூ.10,000 பிணைத்தொகையின் பேரில் ஜாமீன் வழங்கியது.
வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை நீக்கக் கோரி 16 வருடங்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட இரோம் ஷர்மிளா இன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த 16 வருடங்களாக இருந்த இம்பால் மருத்துவமனையிலிருந்து இன்று (செவ்வாய்) காலை 10:30 மணியளவில் நீதிமன்றத்தை நோக்கிப் புறப்பட்டார். அங்கு அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடும் முடிவைக் கூறியவுடன் நீதிமன்றம் அவரை விடுவிக்கும்.
சிறிது நேரத்தில் நீதிமன்றத்தை அடைந்த ஷர்மிளா, தனக்குத்தானே வாதாடிக்கொண்டார். அவர் உத்தரவாதப் பத்திரம் அளித்தால் விடுதலை செய்யப்படுவார் என்று நீதிமன்றம் அறிவித்தது.
தனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று ஷர்மிளா கேட்டுக்கொண்டார். ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்தது குற்றம் என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே அது சாத்தியம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிபதி இரோம் ஷர்மிளாவின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். ஷர்மிளா வரவிருக்கும் மணிப்பூர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்த விசாரணையில், விடுவிப்பு நடைமுறைகளை குறைக்கக் கோரி நீதிமன்றத்திடம் முறையிட்டார் ஷர்மிளா. பதற்றமாகக் காணப்பட்ட அவரைச் சமாதானப்படுத்த இரண்டு ஆதரவாளர்கள் அருகிலேயே அமர்ந்திருந்தனர்.
அப்போது பேசிய ஷர்மிளா, ''16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்தேன். அதனால் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது வேறு விதமான போராட்டத்தைக் கையிலெடுக்க உள்ளேன். மாநில முதல்வருக்கு எதிராக போட்டியிட இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஷர்மிளாவுக்கு நீதிமன்றம் ரூ. 10, 000 பிணையத் தொகையில் ஜாமீன் வழங்கியது. வழக்கு திரும்பவும் ஆகஸ்ட் 23 அன்று விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதப் பின்னணி
மணிப்பூரில் 2000-ம் ஆண்டில் போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி பாதுகாப்பு படை வீரர்கள் பொதுமக்களை துன்புறுத்துவதால், உடனடியாக சட்டத்தை நீக்க வேண்டும் எனக்கோரி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.