Last Updated : 12 Dec, 2013 12:00 AM

 

Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM

உரிமைகளைப் பெற போராட்டம் தொடரும் - ஓரினச் சேர்க்கை ஆதரவு அமைப்புகள் அறிவிப்பு

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதையடுத்து, உரிமைகளை திரும்பப் பெறுவதற்கான போராட்டம் தொடரும் என ஓரினச் சேர்க்கை யாளர்களுக்கான ஆதரவு அமைப்புகள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து, நாஜ் பவுண்டேஷன் (இந்தியா) அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் அஞ்சலி கோபாலன் கூறுகையில், "ஓரினச் சேர்க்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இது ‘கறுப்பு தினம்’. மனித உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ள இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். இந்த உரிமையை திரும்பப் பெறும் வரை ஓய மாட்டோம்’ என்றார்.

இதன் மற்றொரு முக்கிய அமைப்பாளரான ஆனந்த் குரோவர் கூறுகையில், ‘ஐபிசி 377-ஐ எதிர்க்க வேண்டுமானால் நாடாளுமன்றம் செல்லும்படி கூறும் உச்ச நீதிமன்றம், 2-ஜி வழக்கில் ஏன் உத்தரவிட்டது, அரசியல்வாதிகள் தங்கள் வாகனங்களில் தவறாகப் பயன்படுத்தும் சிகப்பு விளக்கு பற்றி ஏன் உத்தரவிட வேண்டும்? இதற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஜி.அனந்த பத்ம நாபன் கூறுகையில், ‘இந்தத் தீர்ப்பு, மனித உரிமைகளின் கீழ் வரும் தனிப்பட்ட சமத்துவம், அந்தரங்கம் மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு எதிராக உள்ளது. அடிப்படை உரிமைகளை பாதிக்கும் இதை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும்’ என்றார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா மற்றும் நிர்வாகிகள் விடுத்துள்ள அறிக்கையில், ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பு பிற்போக்கானது. தொடர்ந்து துன்புறுத்தல்களுக்கும், பாகு படுத்தலுக்கும் ஆளாகி வரும் ஒரே பாலி னத்தவர், திருநங்கைகள் போன்றவர்களின் உரிமைப் போராட்டங்களுக்கும் மிகப் பெரிய பின்னடைவாகும்’ எனக் கூறியுள்ளனர்.

மேலும் அதில், சமீபத்தில் திருத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் மற்றும் பாலுறவு சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கு இந்தப் பிரிவு முரண்பட்டது எனவும் ஒரே பாலினத்தவரின் ஒப்புதலுடன் உறவும், அல்லது பல இனத்தவரின் உறவுகளும் சட்டவிரோதமானது என்று அரசால் அறிவிக்கப்பட முடியாது எனவும் கூறியுள்ளனர். எனவே, மத்திய அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐபிசி 377-ஐ எதிர்த்து நாஜ் பவுண்டேஷன் சார்பில் கடந்த 2004-ல் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி அளித்திருந்தது.

இதை எதிர்த்த 16 அமைப்புகளில் முதன் முறையாக இந்து, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்தவர், புத்த மற்றும் ஜைன மத அமைப்பு கள் ஒன்றாக கைகோர்த்தனர்.

இதில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் யோகி ராம்தேவ்வும் மனுதாரர்களாக இணைந்தனர். இவர்கள் சார்பாக செய்யப்பட்ட மேல் முறையீட்டில்தான் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கும் மேல்முறையீட்டு மனுதாரர்களில் ஒருவரான அகில இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியத்தின் உறுப்பினரான ஜாபர்யாப் ஜிலானி ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘இந்தத் தீர்ப்பின் மூலம் நமது கலாசாரம் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலருக்காக நாம் சட்டத்தை அமைக்க முடியாது, திருத்தவும் முடியாது. ஓரினச்சேர்க்கை இஸ்லாத்தில் மட்டுமல்ல, இந்து, கிறிஸ்தவம் மற்றும் சீக்கியம் உட்பட பல்வேறு மதங்களுக்கும் எதிரானது’ என்றார்.

ஓரினச்சேர்க்கை என்பது ஒரு கொடுமையான வியாதி எனக் கூறும் யோகி ராம்தேவ், ‘இதை ஹோமியோபதி முலம் குணப்படுத்த முயலும். என் பெற்றோர் ஓரினச்சேர்க்கையாளராக இருந்திருந்தால், நான் பிறந்திருக்க மாட்டேன். எனவே, அது இயற்கைக்கு முரணானது’ என்றார்.

ஐபிசி 377-ன் வரலாறு

இந்திய தண்டனை சட்டம் 377-ன்படி, இயற்கைக்கு மாறாக பாலுறவு கொள்வது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். இதை இரு தரப்பின் ஒப்புதலுடனோ அல்லது ஒப்புதல் இன்றியோ செய்யக் கூடாது. 1860- ல் பிரிட்டிஷ் அரசால் இந்த சட்டம் இயற்றப்பட்டது. உலகிலேயே முதன் முறையாக இங்கிலாந்தில் மதக்கோட்பாடுகளின் அடிப்படையில் 1290-ல் இந்த சட்டம் போடப்பட்டது.

இந்த செயலில் ஈடுபடுபவர்களை பிரிட்டனில் உயிருடன் எரிக்கும்படி 1300-ல் சட்டமானது. பிறகு, 1563-ல் ராணி எலிசபெத்தால் மறுசீரமைக்கப்பட்ட இந்த சட்டம் 1861-ல் இந்தியாவிலும் அமல்படுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x