ஆதார் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு

ஆதார் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு
Updated on
1 min read

ஆதார் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், "ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஓர் அடையாள எண் வழங்கப்படுகிறது. இதனால், எங்கும் எப்போதும் ஒருவரின் அடையாளத்தை எளிதாக சரிபார்க்க முடியும்.

குறிப்பாக, நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மக்கள், அரசின் பல்வேறு சேவைகளைப் பெற வசதியாகவே இது இருக்கும்.

பயோமெட்ரிக் அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்படுவதால், இந்த அடையாள அட்டையில் மோசடி செய்வதற்கு வாய்ப்பில்லை.

ஆதார் அட்டை மூலம் பல்வேறு பயன்களைப் பெறலாம். வங்கியில் கணக்கு தொடங்க இந்த அட்டையை பயன்படுத்தலாம். அதோடு, பாஸ்போர்ட் பெறுவதற்கும் இதை அடையாள ஆவணமாக காட்டலாம். அரசின் பல்வேறு திட்டங்களை ஆதாருடன் இணைத்து செயல்படுத்தவுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு ஆதார் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 67.38 கோடி பேருக்கு ஆதார் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கு இதுவரை ரூ.4,906 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைய பாஜக தலைமையிலான ஆட்சியில் அத்திட்டத்தை முழுமையாக ஆதரித்திருப்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in