

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் ‘முதலாளித்துவ காலக் கட்டத்தில் காந்தியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது பெரும் சவால், ஆனால் அது அவசியமானது என்று கூறியுள்ளார்.
காந்தி ஆசிரமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அகிலேஷ் கூறும்போது, “இது தொழில்நுட்ப மாற்றங்கள், முதலாளித்துவம் மற்றும் சந்தைப்பொருளாதார காலகட்டம், இதன் மத்தியில் காந்தியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது பெரும் சவால்தான். ஆனால் இன்றைய தேதியில் அவசியமானது.
காந்திஜி தொடங்கியதை நாம் முன்னெடுத்துச் செல்வோம். கிராமங்களும், சமுதாய படிமுறையில் கடைசியில் இருப்பவர்கள் மேலும் பலவீனமடைவதை நாம் தடுக்க வேண்டும். அனைத்து சமத்துவமின்மையும் நீங்கினால்தான் இந்தியா பலமடையும். நாடும் சமுதாயமும் காந்திஜி பாதையில் சென்றால் வலுவடையும்.
உலகின் மகத்தான தலைவர் காந்திஜி, அவரது கொள்கைகள் அனைத்து கருத்தியலை விடவும் சிறந்தது” என்றார்.