

செல்வந்தர்களின் நலனுக்காகவே பாஜக செயல்படுகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடினார்.
மத்தியப் பிரதேச மாநிலம், தர் மற்றும் குக்ஸி பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் அவர் பேசும்போது, "வெறுமனே சாலைகள் அமைத்தால் போதும், மற்றவை எல்லாம் சரியாகி விடும் என்று பாஜக கருதுகிறது. சாலைகள் மூலம் ஏழைகளுக்கு பயன் ஏதுமில்லை. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கூடாது என்ற அர்த்தத்தில் நான் இதைக் கூறவில்லை. ஏழைகளுக்கு பயனளிக்கும் வகையில் கல்வி, சுகாதாரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனக் கூறுகிறேன்.
செல்வந்தர்கள் சாலைகளையும், விமானங்களையும் பயன்படுத்துகின்றனர். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சாலைகள் அமைப்பதன் மூலம் உணவு அளித்துவிட முடியாது.
வியர்வை சிந்த வயலில் கடுமையாக உழைக்கும் விவசாயி, வானில் பறந்து செல்லும் விமானத்தைப் பார்க்கும்போதெல்லாம், என்றாவது தனது மகன் அல்லது மகள் அதில் பயணம் செய்யும் காலம் வரும் என கனவு காண்கிறான். அந்த கனவு நனவாக வேண்டும்.
ஏழைகள், நலிவடைந்த பிரிவினரின் நலனை முன்னிறுத்தி காங்கிரஸின் அரசியல் அமைந்துள்ளது. பணக்காரர்களின் நலனுக்காக பாஜக செயல்படுகிறது. ஏழைகள், தலித்துகள், பழங்குடியினரை முன்னேற்றமடையச் செய்வதுதான் காங்கிரஸின் கனவு.
ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே உள்ள சுவரை உடைக்க காங்கிரஸ் விரும்புகிறது. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் எங்களுக்கு அக்கறை உள்ளது. அதே சமயம், சாலைகள் அமைப்பதும், மின் வசதியை ஏற்படுத்துவது மட்டுமே ஏழைகளின் பசித் துயரைப் போக்க உதவாது.
அதனால்தான் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்தது. அதற்கான நிதி எங்கிருந்து கிடைக்கும் என்று எதிர்க்கட்சி (பாஜக) கேள்வி எழுப்புகிறது. இத்திட்டத்துக்கு எப்படி நிதி திரட்டுவது என்பது எங்களுக்குத் தெரியும்.
மத்திய பிரதேச மாநில பாஜக ஆட்சியில் பழங்குடியினரின் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு செல்வந்தர்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. அனைத்துப் பிரிவினரின் நலனுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கிறது. பாஜக மக்களைப் பிரிக்கும் செயலில் ஈடுபடுகிறது" என்றார் ராகுல் காந்தி.