‘சாகும் வரை உண்ணாவிரதங்கள்’ எப்படிப்பட்டவை?

‘சாகும் வரை உண்ணாவிரதங்கள்’ எப்படிப்பட்டவை?
Updated on
3 min read

ணிப்பூரைச் சேர்ந்த இரோம் சர்மிளாவின் காலவரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டக் கிளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம், தேவ் ஆனந்த் கதாநாயகனாக நடித்த ‘கைட்’ (வழிகாட்டி) திரைப்படத்தை ஏன் நினைவுபடுத்த வேண்டும். ஆர்.கே. நாராயண் எழுதிய கதையைக் கருவாக வைத்து எடுக்கப்பட்ட இந்த இந்தித் திரைப்படம் 1960-களில் வெளியானது. வகீதா ரெஹ்மான் கதாநாயகி. 1960-களில் ஏகப்பட்ட பிரச்சினைகள். சாகும் வரை உண்ணாவிரதம் என்ற கிளர்ச்சிகளும் அதிகம். ‘பஞ்சாபி சுபா’ இயக்கத்தைச் சேர்ந்த சந்த் ஃபதே சிங், உண்ணாவிரதம் இருந்த காலம். பஞ்சாபி மொழி பேசும் பகுதிகளை இணைத்து ஒரே மாநிலமாக்க வேண்டும் என்பது அவருடைய கோரிக்கை.

‘கைட்’ திரைப்படத்தில் தேவ் ஆனந்த் (ராஜு) தன்னுடைய காதலி வகீதா ரெஹ்மானை ஏமாற்றிவிடுவார். போலி கையெழுத்து மோசடிக்காகக் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெறுவார். மகாராஷ்டிரத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் புகலிடம் தேடுவார். இளைஞரான அவரை, கடவுள்தான் மழையை அருள்வதற்காக அனுப்பியிருக்கிறார் என்று கிராம மக்கள் நம்புவார்கள். மழை பெய்யும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று அவரைக் கட்டாயப்படுத்துவார்கள். எனக்கு தெய்வீக சக்தி கிடையாது, நான் சிறையிலிருந்தவன் என்று எவ்வளவோ கெஞ்சுவார். யாரும் அவர் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். பிறகு மக்களின் மனங்களை நோகடிக்க விரும்பாமல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இறப்பார். அப்போது மழை பெய்யும். மக்கள் தங்களுடைய நம்பிக்கை பொய்க்கவில்லை என்று கொண்டாடுவார்கள்.

நன்றாகப் படித்தவர்கள், சூழ்நிலைக் கைதியானவர்கள், சமூக நெருக்கடிக்காக முடிவு எடுப்போர், பெயரையும் புகழையும் விரும்புவோர் என்று பலதரப்பட்டவர்கள் இப்போதும், ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ என்று அறிவிக்கிறார்கள். ஆனால் உண்மையில் யாரும் உயிரைவிடத் தயார் இல்லை.

இதுதான் இரோம் சர்மிளாவின் மனதிலும் தோன்றியிருக்க வேண்டும். ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற லட்சியத்துக்காக உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அவரை வைத்து அரசியல் ஆதாயம் பார்க்க முயன்றவர்கள்தான் அனேகம் பேர். தன்னார்வத் தொண்டர்கள், சிவில் உரிமைகளுக்காகப் பாடுபடும் அமைப்புகள் உள்பட பலருக்கும் உண்ணாவிரதத்தை சர்மிளா கைவிட்டது பிடிக்கவில்லை. சர்மிளா இப்படியே தொடர்ந்து உண்ணாவிரதமிருப்பதைத்தான் அவர்கள் விரும்புகின்றனர்.

உண்ணாவிரதத்துக்காகவே தாங்கள் உரு வாக்கி வந்த ‘ஒரு அடையாளம்’ போய்விட்டதே என்று ஊடக உரிமையாளர்களுக்கு உள்ளூர வருத்தம். தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக விரும்புகிறார். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மாநில அரசால் நீக்க முடியாது என்று தெரியாத அளவுக்கு சர்மிளா முட்டாளா? திரிபுராவில் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் திறமையான நிர்வாகம் மூலம் அமைதியை நிலை நாட்டி, சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தின் பிடியிலிருந்து மாநிலத்தை விடுவித்ததைப்போல மணிப்பூரிலும் சாதிக்க நினைக்கிறார்.

ஜனநாயக இந்தியாவில் ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒருவர் இப்படி லட்சிய நோக்குடன் சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்தால், அரசியல் சாதுர்யம் மிகுந்த சிலர் அவரைச் சூழ்ந்துகொண்டு உண்ணாவிரதத்தை முடிக்க விடாமல் பார்த்துக் கொள்வார்கள். அதே சமயம் அந்தப் பலன் முழுக்க அரசியல் ரீதியாகத் தமக்குக் கிடைக்கும்படி செய்துவிடுவார்கள்.

இதற்கு சமீபத்திய 2 உதாரணங்களைப் பார்ப்போம். 5 ஆண்டுகளுக்கு முன்னால் அண்ணா ஹசாரே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் 12 நாள்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். கடைசியில் டெல்லியில் போர்டிஸ் மருத்துவமனையிலும் ஜிண்டால் மருத்துவமனையிலும் தங்கி உடலை சீராக்கிக் கொண்டார். அவர் உண்ணாவிரதம் இருந்தபோது உடனிருந்து ஆதரித்த சுவாமி அக்னிவேஷ் அரசுடன் பேரம் நடத்தினார் என்றார்கள். ஓராண்டுக்குப் பிறகு டெல்லி ஜந்தர் மந்தரில் அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் இருந்தார். இந்த முறை எச்சரிக்கையாக அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கோபால் ராய் ஆகிய சிஷ்ய கோடிகளைத் தன்னோடு உண்ணாவிரதம் இருக்கச் செய்தார். 10 நாள்களுக்கு இது தொடர்ந்தது. பிறகு தரைப்படையின் 24-வது தலைமைத் தளபதி வி.கே. சிங் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அண்ணாவின் ராலேகான் சித்தி ஆசிரமம் தொடர்பாக கோபால் ராய்க்கும் வி.கே. சிங்குக்கும் டி.வி. நிகழ்ச்சியில் கடுமையான வாக்குவாதம் நடந்தது. அடுத்து மும்பையில் நடந்த உண்ணாவிரதத்துக்குப் பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. முதலமைச்சர் வந்து பழரசம் கொடுத்ததும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு ஆசிரமத்துக்குத் திரும்பிவிட்டார் ஹசாரே. உண்ணாவிரதத்தை முடித்துவிட்டாரே என்று பலருக்கு அதிருப்தி. மேதா பட்கர் மட்டுமே நேர்மையாக, தயக்கமின்றி தனது கருத்தைத் தெரிவித்தார்.

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதால் அண்ணா உயிர் பிழைத்தது மட்டுமல்ல, தன்னுடைய ஆதரவாளர்களுக்கு நன்மை களையும் செய்ய முடிந்தது. அவர்களால் அரசில் உயர் பதவிகளைப் பெற முடிந்தது. நெஸ்லேவுக்குப் போட்டியாக ஒருவர் தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கிவிட்டார் (பாபா ராம்தேவ்). இன்னொருவர் பாஜக அரசில் அமைச்சர் (வி.கே. சிங்). முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (வினோத் ராய்) ஓய்வுக்காலத்துக்குப் பிறகும் பல புதிய பொறுப்புகளைப் பெற்றுக்கொண்டார். இவர்களில் யாரும் அண்ணா ஹசாரேவைப் போய் பார்ப்பது கூட கிடையாது.

கடைசி உதாரணம் மேதா பட்கர். அவருடைய லட்சியம் நிறைவேறாவிட்டால்கூட, உடல்நலம் கெடுவதற்கு முன்னால் உண்ணாவிரதங்கள் முடிந்துவிடும். மழைக்காலம் வரப் போகிறது என்றாலே நர்மதை நதியின் ஏதாவது ஒரு கரையில் அவர் போராட்டத்தைத் தொடங்கிவிடுவார். குஜராத்தில் அவரை அரசு வரவேற்காது என்பதால் மத்தியப் பிரதேசத்தில்தான் பெரும்பாலும் நடைபெறும். ஒரு ரகசியம் சர்மிளாவுக்குப் புரிய 16 ஆண்டுகள் ஆனது, அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மாதம் பிடித்தது, மேதா பட்கருக்கு முதலிலேயே தெரிந்திருந்தது. ஒரு திரைப்படத்தில் ஜெனரல் பேட்டன் கூறுவார், “தன் நாட்டுக்காக இறந்து யாருமே போரில் வென்றதில்லை, தனக்காக இன்னொருவனை பலி கொடுப்பவன்தான் வெற்றி பெறுவான்” என்று. அது மேதா பட்கருக்கு முதலிலேயே தெரிந்திருந்தது. எனவே சர்மிளா, அண்ணா, மேதா மூவரும் சொல்வது ஒன்றுதான், ‘உங்களுடைய லட்சியத்தை நேசியுங்கள், அதற்காக உயிரைக் கொடுக்கத் தயாராகுங்கள் (ஆனால் கொடுத்துவிடாதீர்கள்!)’.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in