காசி கோயிலில் கேமராவுடன் நுழைந்த நித்தியானந்தா சீடர்: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது உ.பி. போலீஸ்

காசி கோயிலில் கேமராவுடன் நுழைந்த நித்தியானந்தா சீடர்: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது உ.பி. போலீஸ்
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம் காசியிலுள்ள விஸ்வநாதர் கோயிலில் தடையை மீறி படம் எடுக்க முயன்ற நித்தியானந்தாவின் சீடரிடமிருந்து கேமரா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, காசி விஸ்வநாதர் கோயில் மத்திய பாதுகாப்புப் படையின் கண்காணிப்பில் உள்ளது. இந்த கோயிலின் வளாகத்தினுள் புகைப்படம் மற்றும் விடியோ கேமரா எடுத்துச் செல்லவும் படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு பூஜை செய்வதற்காக நித்தியானந்தா தனது மூன்று சிஷ்யர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை சென்றார். கோயிலின் கர்பக்கிரஹம் அருகில் நித்தியானந்தா பூஜை செய்யத் தொடங்கியபோது, அதைப் படம் எடுப்பதற்காக அவருடன் வந்த சிஷ்யர் கேமராவை பையிலிருந்து எடுத்திருக்கிறார். இதை சிசிடிவி கேமரா மூலம் பார்த்த பாதுகாப்பு போலீசார், உடனடியாக கேமராவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் நடந்த முதல்கட்ட விசாரணைக்கு பின் கேமராவை திருப்பித் தந்தனர். இந்த கேமராவின் உரிமையாளரும் நித்தியானந்தாவை உள்ளே அழைத்துச் சென்றவருமான சங்கர்புரியிடமும் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, அதன் கியான்வாபி பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.அணில்குமார் பாண்டே கூறுகையில், "தடையை மீறி கேமராவை உள்ளே கொண்டு வந்தமைக்காக சங்கர்புரியின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பை மீறி கேமராவை கொண்டு சென்றது எப்படி என விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

வழக்கமாக, நித்தியானந்தாவைப் போல் வரும் சாமியார்களிடம் பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனை செய்வதில்லை. இதனால், படம் எடுப்பதற்கான ஏற்பாடுகளை நித்தியானந்தாவே செய்திருக்கலாம் என சர்ச்சை எழுந்துள்ளது.

நித்தியானந்தா சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பு கடந்த ஆண்டு நடந்த கும்பமேளாவில், அவருக்கு நிர்வாணி அஹாடா எனும் சாதுக்களின் சபையால் ரகசியமாக கொடுக்கப்பட்ட ‘மஹா மண்டலேஷ்வர்’ பட்டம் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in