Published : 21 Nov 2013 08:02 AM
Last Updated : 21 Nov 2013 08:02 AM

ஆட்டோமேட்டட் கில்லர் மெஷின்?- ஏ.டி.எம்.களில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு!

பெங்களூரில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஏ.டி.எம். மையத்தில் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சில வங்கிகளின் அதிகாரிகளிடம் விசாரித்தால், வாடிக்கையாளர்களுக்கு மட்டு மின்றி வங்கிகளுக்கே போதியப் பாதுகாப்பு இல்லை என்கிற ரீதியிலான தகவல்கள் கதிகலங்க வைக்கின்றன.

வீடியோ கேமிராவில் பதிவு

பெங்களூரில் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும் ஜோதி உதய் என்பவர் ஏ.டி.எம். மையத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட காட்சிகள் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரிவாளால் அவர் வெட்டப்படும் காட்சிகள் அந்த ஏ.டி.எம். மையத்தின் வீடியோ கேமிராவிலும் பதிவாகி இருக்கிறது. பெண்ணின் பையில் 15 ஆயிரம் கொள்ளை போயிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனாலும் பெண்ணின் நகைகள் அப்படியே இருப்பதால் இது தனிப்பட்ட விரோதத் தாக்குதலாகவும் இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கிறார்கள். எப்படி இருப்பினும் இந்தச் சம்பவம் ஏற்கெனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் படுமோசமாக இருக்கும் ஏ.டி.எம். மையங்களை மேலும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இதுதொடர்பாக தேசிய வங்கியின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ஒரு நிறுவனத்துக்கு வரும் வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அந்நிறுவனத்தின் கடமை. இது ஏ.டி.எம். மையங்களுக்கும் பொருந்தும். ஆனால், இது வரை எந்த வங்கியும் இதுபற்றி யோசிக்கக்கூட இல்லை. வங்கிகளை முறைப்படுத்தி ஆலோசனை வழங்கும் இந்திய வங்கிகள் சங்கம் (Indian banks association) மற்றும் விதிமுறைகளை வகுத்து வங்கிகளை வழி நடத்தும் ரிசர்வ் வங்கி ஆகியவைகூட இதுவரை வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்து பெரிதாக எந்த விதிமுறையும் வகுக்கவில்லை. அதன் விளைவாகத்தான் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை முயற்சி சம்பவங்களும், காவலாளி கொலை செய்யப் படுவதும் தாக்கப்படுவதும் நடக்கின்றன.

செயல் இழந்த தொழில்நுட்பம்

ஏ.டி.எம். மையங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டபோது டெபிட் அட்டையை மையத்தின் வாயில் கதவில் சொருகினால் மட்டுமே கதவு திறக்கும். கதவில் அட்டையை சொருகும்போதே உள்ளே இருக்கும் கேமிரா கண்விழித்துக்கொள்ளும். கேமிரா 90 நாட்கள் வரை இடைவிடாமல் பதிவுகளை சேமித்து வைத்துக்கொள்ளும். ஆனால், இன்றைக்கு

90% மையங்களில் வாயிலில் அந்த தொழில் நுட்பம் செயலிழந்துவிட்டன. அதேபோல், ஒரு ஏ.டி.எம். மையத்தின் ஷட்டர் கதவு திறந்தி ருந்தால் அது மீண்டும் கீழே இறக்க முடியாதபடி மேலே சுவற்றுடன் பூட்டப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் காவலாளி தவிர வெளியாட்கள் யாரும் ஷட்டரை இழுத்து மூடவோ, பூட்டு போடவோ முடியாது. ஆனால், தற்போது யார் வேண்டுமானாலும் ஏ.டி.எம். மையத்தின் ஷட்டர் கதவை இழுத்து சாத்திவிடலாம் என்கிற நிலைதான் உள்ளது - பெங்களூருவிலும் அதுதான் நடந்துள்ளது.

யாருக்கும் பாதுகாப்பு இல்லை

இப்படி ஏ.டி.எம். மையங்களில் மட்டும் அல்ல... பெரும்பாலான வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் பணத்துக்கும் பாதுகாப்பு இல்லை. இன்று பெரும்பாலான வங்கி காவலாளிகளுக்கு மிகப் பழமையான ‘பி - 303’ மாடல் துப்பாக்கிதான் (1914-ம் ஆண்டு பிரிட்டிஷ் மாடல் - முதலாம் உலகப்போரில் பயன்படுத்தியது!) கொடுக்கப்பட்டுள்ளது. ஐந்து ரவுண்டு மட்டுமே இதில் சுட முடியும். ஆனால், அதற்கு துப்பாக்கியில் குண்டு லோட் செய்யப்பட்டிருக்க வேண்டுமே... ஆனால், அதுவும் கிடையாது. ஏனெனில் குண்டுகள் லோட் செய்யப்பட்டிருக்கக் கூடாது என்பது வங்கிகள் மற்றும் அவை சார்ந்த பாதுகாப்பு ஏஜென்ஸிகளின் வாய்மொழி உத்தரவு. துப்பாக்கி தவறுதலாக வெடித்துவிட்டால் என்ன செய்வது என்று அதற்கு காரணம் கூறுகிறார்கள்.

குறைவான சம்பளம்

பாதுகாப்பு ஏஜென்ஸிகள், முன்னாள் போலீசார், ராணுவத்தினர் மற்றும் ஆயுதப் பயிற்சி பெற்ற தகுதியான நபர்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்பதே உண்மையான காரணம். ஏனெனில் அவர்களை எடுத்தால் அதிக சம்பளம் கொடுக்க நேரிடும்.

பெரிய வங்கிகள் தினசரி 30 முதல் 40 ஏ.டி.எம். மையங்களில் பணத்தை செலுத்த 25 முதல் 32 கோடி ரூபாய் வரை பணத்தை ஒரு வேன் போன்ற வண்டியில் எடுத்துச் செல்கின்றன. அதில் ஒரு டிரைவர், இரு தனியார் பாதுகாவலர்கள் இருப்பார்கள். அவர்களிடமும் அதே (குண்டு லோட் செய்யப்படாத) ரகத் துப்பாக்கிதான்.

30 லட்சம் பணம் இருக்கும் ஒரு ஏ.டி.எம். மையத்தின் வயதான பாதுகாவலருக்கு சுமார் 4,000 சம்பளம் என்றால், 30 கோடி ரூபாயை வண்டியில் எடுத்துச் செல்லும் நடுத்தர வயதுடைய பாதுகாவலருக்கு சம்பளம் சுமார் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே. வங்கி களில் இருக்கும் பாதுகாவலர்களுக்கும் இதே நிலைமைதான். இன்று பல்வேறு வங்கி களில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் வாடிக்கை யாளர்களின் உதவியாளர்களாகவும், வங்கிப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கித் தருபவர்களாகவும் பயன்படுத்தப்படுகின்றனர்.

ஏ.டி.எம். மையம் தொடங்கி வைப்பு நிதி வரைக்கும் கறாராக லாபம் பார்க்கும் வங்கிகள் தங்களது பணத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில் அலட்சியமாக இருக்கக் காரணம், காப்பீடு. நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டால் நமக்கென்ன என்கிற பொறுப்பின்மை. ஏ.டி.எம். மையங்களில் உடனடியாக குறைந்தபட்சம் ஆபத்துக்கால அலாரம், துப்பாக்கியுடன் கூடிய 50 வயதுக்குட்பட்ட காவலாளி போன்ற வசதிகளையாவது ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

காணாமல்போன ஸ்ட்ராங் ரூம்!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சில தேசிய வங்கிகள் 'கரன்ஸி ஜெஸ்ட்' என்கிற பெயரில் 'ஸ்ட்ராங் ரூம்' வைத்திருக்கின்றன. சுமார் ஒன்றரை அடி தடிமனுள்ள கான்கிரீட் சுவர் கொண்ட இந்த அறையைக் கணிப்பொறி கடவுச்சொல், இருவருக்கும் மேற்பட்டோரின் கைவிரல் ரேகை, ரகசிய எண் பூட்டு, சாதாரண பூட்டுகள் இத்தனையையும் ஒருசேர இயக்கினால் மட்டுமே திறக்க முடியும். இந்த அறைகள் சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்தாலும் இவை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை. இங்கு கதவைத் திறக்கவும் பணம் எடுக்கவும் ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவை. ஆனால், இந்த நடைமுறை தற்போது முழுவதுமாக கைவிடப்பட்டுவிட்டது. இதுவும் பாதுகாப்பு குறைபாடுகளில் ஒரு முக்கிய அம்சமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x