

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான 'கோப்ராபோஸ்ட்' இணையதளம் ஸ்டிங் ஆபரேஷனை ஒளிபரப்பு செய்வதை நிறுத்தவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஸ்டிங் ஆபரேஷன் காங்கிரஸ் கட்சியின் சதி காரணமாகவே வெளியாகியுள்ளது என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி, பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக சில செய்திகள் இன்று சில நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் காங்கிரஸ் சதி இருக்கிறது. தேர்தல் சூழல் சுமுகமாக இருக்கும் நிலையில், இத்தகைய தவறான பரப்புரை மூலம் விஷத்தை பரவச்செய்கிறது காங்கிரஸ் என்றார்.
மேலும், இது தொடர்பாக இன்று காலை தேர்தல் ஆணையத்திடம் பேசியுள்ளதாகவும், கோப்ராபோஸ்ட் இணையதளம் உடனடியாக பாபர் மசூதி தொடர்பான அவதூறு பிரச்சாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அந்நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி மதவாதத்தை தூண்டுவதாகவும் தெரிவித்தார்.