

யமுனை நதிக்கரையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அறக்கட்டளையின் உலக கலாசார விழா 3 நாட்கள் நடைபெற்றது. இதற்கான சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.4.75 கோடியை நாளை (சனிக்கிழமை) அறக்கட்டளை செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார். டெல்லி மாநகர வளர்ச்சி ஆணையத்திடம் இந்தத் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் 3 நாள் உலக கலாச்சார விழா நடைபெற்ற இடத்தை ஷஷி சேகர் தலைமையிலான நிபுணர்கள் குழு ஜூன் 10-ம் தேதிக்குள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் ஜூலை 4-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 10-ம் தேதிக்குள் விழா நடைபெற்ற இடத்தை பார்வையிடவில்லையெனில், ஒட்டுமொத்த நோக்கமும் தோற்கடிக்கப்பட்டு விடும், ஏனெனில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த வழக்கு விசாரணை மேலும் ஜூலை 19-ம் தேதி நடைபெறும்.
ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூ.4.75 கோடியை வாழும் கலை அறக்கட்டளை செலுத்தாமல் விட்டது வேண்டுமென்றே செய்யப்பட்ட விதிமீறல் என்று பசுமைத் தீர்ப்பாயம் சாடியுள்ளது.