Last Updated : 14 Jan, 2017 09:55 AM

 

Published : 14 Jan 2017 09:55 AM
Last Updated : 14 Jan 2017 09:55 AM

மதுவிலக்கை ஆதரித்து பிஹாரில் உலகின் மிக நீளமான மனித சங்கிலி: நிதிஷுடன் பாஜகவும் பங்கேற்பதால் மீண்டும் சர்ச்சை

பிஹாரில் அமல்படுத்தப்பட்டுள்ள மதுவிலக்கை ஆதரித்து, உலகின் மிக நீளமான மனித சங்கிலி தலைநகர் பாட்னாவில் அமைக்கப்பட உள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் பங்கேற்பதால் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமார், பண மதிப்பு நீக்க விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து வருகிறார். நிதிஷின் கூட்டணிக் கட்சியான, லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் பண மதிப்பு நீக்கத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த விஷயத்தில் நிதிஷ் அமைதி காப்பதுடன் மோடிக்கு பாராட்டும் தெரிவிப்பது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

சீக்கியர்களின் மதகுரு கோவிந்த்சிங் 350-வது பிறந்தநாள் விழா பாட்னாவில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியுடன் நிதிஷ்குமாரும் கலந்துகொண்டார். இதில் மதுவிலக்கு தொடர்பாக இருவரும் ஒருவருக்கொருவர் பாராட்டு தெரிவித்துக்கொண்டனர். இந்த விழாவில் பங்கேற்ற லாலு, தரையில் அமர்ந்து விருந்து உண்டார். இதுவும் தேசிய அரசியலில் முக்கிய நிகழ்வாக அனைவராலும் பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பாட்னாவில் வரும் ஜனவரி 21-ல் நிதிஷ் ஏற்பாடு செய்யும் மனித சங்கிலியில் பாஜகவும் கலந்துகொள்ளும் என்று கூறி அக்கட்சி பலரையும் வியப்படையச் செய்துள்ளது. இதன் மூலம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் மீண்டும் சேர வாய்ப்புள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

இது குறித்து ’தி இந்து’விடம் பிஹார் அரசியல் வட்டாரம் கூறும்போது, “பண மதிப்பு நீக்க விவகாரத்தில் பிரதமர் மோடி கேட்ட 50 நாள் அவகாசத்துக்கு பிறகு நிதிஷ் விமர்சனத்தை தொடங்குவார் என்றார்கள். ஆனால் நிதிஷ் அவ்வாறு தொடங்கவில்லை. இவ்விரு கட்சிகள் இடையே தொடர்ந்து நிலவும் மர்மம் இன்னும் விலகியபாடில்லை. பிஹாரில் தன்னைவிட அதிக எம்எல்ஏக்களை வைத்திருக்கும் லாலுவை அவ்வப்போது மிரட்டுவதற்காகவே நிதிஷ் இவ்வாறு செய்து வருகிறார். தனது நிர்வாகத்தில் லாலு தலையிடாமல் இருக்கச் செய்வதே இதன் நோக்கம் ஆகும். எனவே நிதிஷ் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் குறைவு. அடுத்த மக்களவை தேர்தலில் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் பேசப்பட்டார். தற்போது மோடியை பாராட்டுவதால் அதற்கான வாய்ப்பை நிதிஷ் இழந்து விட்டார்” என்று தெரிவித்தனர்.

பிஹாரில் ஆளும் மெகா கூட்டணியின் முக்கிய உறுப்பினரான ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 11,292 கி.மீ. நீள மனித சங்கிலி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்பது குறித்து பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான பாஸ்வானின் லோக் ஜன சக்தி, ராஷ்ட்ரிய லோக் சமதா ஆகியவை இன்னும் முடிவு செய்யவில்லை. மற்றொரு கூட்டணிக் கட்சியான, ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா இதில் பங்கேற்க முடியாது என அறிவித்துள்ளது.

ஆளும் மெகா கூட்டணியின் மற்றொரு உறுப்பினரான லாலுவும் தனது கட்சியினருடன் மனித சங்கிலியில் கலந்துகொள்கிறார். இது குறித்து லாலு கூறும்போது, “உலகின் முக்கியத்துவம் வாய்ந்த மனித சங்கிலியில் கலந்துகொள்ளாவிடில் தனிமைப்பட்டு விடுவோம் என பயந்து பாஜக இதில் பங்கேற்க முன்வந்துள்ளது. ஏனெனில் பாஜக ஏற்கெனவே பண மதிப்பு நீக்க விவகாரத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. பிஹாரில் மதுவிலக்கை ஆதரிக்கும் மோடி, அதை தேசிய அளவில் அமல்படுத்த தயாரா?” என்றார்.

சுமார் அரை மணி நேரம் நடைபெறவுள்ள இந்த மனித சங்கிலி மூலம் கின்னஸ் உலக சாதனை மற்றும் லிம்கா சாதனை படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மனித சங்கிலியை பார்வையிட வருமாறு இவற்றின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளில்லா 40 குறு விமானங்கள் மூலம் இதை வீடியோ படம் பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதை செயற்கைக்கோள்கள் மூலம் பதிவுசெய்ய இஸ்ரோவுக்கும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. நிதிஷ் உத்தரவின் பேரில் மனித சங்கிலிக்கான ஏற்பாடுகளை மாநில தலைமைச் செயலாளர் நேரடியாக கண்காணித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x