

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லியை இலங்கை ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்ச நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சமீபத்தில் மத்திய பாதுகாப்புத்துறைச் செயலர் ஆர்.கே.மத்தூர் இலங்கை சென்று வந்தார். அங்கு கோத்தபய ராஜபக்சவைச் சந்தித்தார். அப்போது இருநாட்டு ராணுவங்களை வலுப்படுத்துவது மற்றும் இருநாட்டு ஒற்றுமைக்கான புதிய வழிகளை உருவாக்குவது போன்றவை குறித்து இருவரும் விவாதித்தனர்.
மத்தூர் இலங்கை சென்று வந்து 10 நாட்களுக்குள்ளாகவே கோத்தபய ராஜபக்ச இந்தியாவுக்கு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேட்லி கோத்தபய ராஜபக்ச சந்திப்பின்போது என்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்பது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை.
இந்தச் சந்திப்பின் முடிவின்போது கோத்தபய ராஜபக்சவுக்கு இந்தியா சார்பில் நினைவுப் பரிசை ஜேட்லி வழங்கினார். இதற்கிடையே, மாலத்தீவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமது நசீம் இன்று இந்தியா வர இருக்கிறார். இங்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருடன் அவர் சந்திப்புகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.