Last Updated : 11 Jul, 2016 01:17 PM

 

Published : 11 Jul 2016 01:17 PM
Last Updated : 11 Jul 2016 01:17 PM

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற்றுவந்த சென்னை மாணவர் மர்ம மரணம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற்றுவந்த சென்னை மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தங்கியிருந்த தனியார் குடியிருப்பில் உள்ள அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றான எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு பயின்று வந்த மாணவர் ஜி.சரவணன். சென்னையைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகனான இவர், கடந்த பத்து தினங்களுக்கு முன் தான் எய்ம்ஸ் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

மாணவர் விடுதியில் இடம் கிடைக்காததால் அருகிலுள்ள ஹோஸ்காஸ் பகுதியில் தனியார் குடியிருப்பில் அறை எடுத்து தனியாகத் தங்கியிருந்தார் சரவணன்.

அவரது அறை நேற்று முன்தினம் சனிக்கிழமை நாள் முழுவதிலும் திறக்கப்படாமல் இருக்கவே, வீட்டின் உரிமையாளர்கள் சந்தேகப்பட்டு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

போலீஸார் அந்த வீட்டின் கதவை உடைத்துப் பார்த்த போது உள்ளே சரவணன் இறந்த நிலையில் கிடந்தார்.

முதற்கட்ட விசாரணையில் சரவணனின் உடலில் அளவுக்கு அதிகமான பொட்டாசியம் குளோரைடு மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சாதாரணமாக வாந்தி, பேதி ஏற்பட்டு, உடலின் நீரளவு குறைந்துவிடும் போது அளிக்கப்படும் இந்த மருந்து இதை அளவுக்கு அதிகமாக கொடுத்தால் உயிர் பலியாகும் ஆபத்து உள்ளது.

இதை சரவணனுக்கு எவரும் செலுத்தினரா அல்லது அவரே செலுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து ஹோஸ்காஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரியில் சேர்ந்த நாள் முதலே சரவணன் யாருடனும் அதிகமாக பேசியதில்லை என சக மாணவர்கள் கூறுகின்றனர்.

இதனால், சரவணன் தன் சொந்தப் பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வழக்கமாக எய்ம்ஸ் போன்ற கல்லூரிகளில் சிறந்த மாணவர்களுக்கே இடம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். சிறந்த மாணவர்களில் ஒருவரான சரவணன், மதுரையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ் பயின்றவர் ஆவார்.

சரவணன் போல் பல மைல்கள் தொலைவில் இருந்து டெல்லியில் பயில வருவோருக்கு தங்கும் விடுதியில் இடம் அளிக்கப்பட வேண்டும். இது கிடைப்பதால் அங்குள்ள மற்ற தமிழக மாணவர்களுடன் பேசிப் பழகவும், உதவிகள் பெறவும் வாய்ப்புகள் அமைந்து விடுகிறது. ஆனால், எய்ம்ஸ் கல்லூரியில் குறைந்த இடம் காரணமாக பல மாணவர்களுக்கு விடுதியில் இடம் கிடைப்பதில்லை. இதை அதிகரிக்க வேண்டி பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது.

சரவணனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x