

ஹைதராபாத்தில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி எரித்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.
ஹைதராபாத் கல்ஜிபாலி பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரூபேஷ் அகர்வால். இவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நடன அழகி சிந்தியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சானியா (8) என்ற பெண் குழந்தையும் இருக்கிறது.
இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருடன் சிந்தியாவுக்கு அண்மையில் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே இது காதலாக மாறியது. இதன் காரணமாக கணவர் ரூபேஷை விட்டு பிரிய முடிவெடுத்த சிந்தியா மகள் சானியாவுடன் பிரான்ஸ் செல்வதற்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரூபேஷ் சிந்தியாவை கண்டித்துள்ளார். எனினும் தனது முடிவில் இருந்து சிந்தியா பின்வாங்கவில்லை. இதன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது தன்நிலை மறந்த ரூபேஷ் ஆத்திரத்தில் மனைவி சிந்தியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடலை துண்டாக துண்டாக வெட்டி, ஒரு சூட்கேஸில் வைத்து குழந்தையையும் அழைத்துக் கொண்டு காரில் ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதிக்கு சென்றுள்ளார். மதனபல்லி என்ற இடம் வந்ததும் மனைவியின் உடலை தீயிட்டு கொளுத்தினார்.
பின்னர் அங்கிருந்து அவர் வீட்டுக்கு புறப்பட்டபோது கார் சேற்றில் சிக்கிக் கொண்டது. அப்போது அப்பகுதியில் இருந்த உள்ளூர் மக்கள் சிலர் காரை சேற்றில் இருந்து அப்புறப்படுத்த உதவ முன்வந்தபோது, உடல் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரூபேஷையும் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின்போது, முதலில் பங்கு சந்தை பிரச்சினையால் இந்த கொலை செய்ததாக தெரிவித்த ரூபேஷ் பின்னர் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததால் தான் சிந்தியாவை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். மேலும் மகளை பிரிய மனம் இல்லாததால் மனைவியை கொல்ல துணிந்ததாகவும் தெரிவித்தார். இந்த கொடூர கொலை தொடர்பாக சம்ஷாபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.