

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் தங்கும் விடுதியிலேயே குளிப்பதற்காக வெந்நீர் வசதி தருமாறு திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் சாம்பசிவ ராவ் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோ சனை கூட்டம் நேற்று நடை பெற்றது.
இதில் சாம்பசிவ ராவ் கூறிய தாவது:
திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அவர்கள் தங்கும் விடுதியில் குளிப்பதற்காக வெந்நீர் வசதி செய்துதர வேண்டும். இதுதவிர, திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், மாதவம் உள்ளிட்ட பக்தர்கள் தங்கும் விடுதிகளிலும் வெந்நீர் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வேத பாராயணம்
மேலும், தேவஸ்தானத்துக்கு சொந்தமான அனைத்து கோயில்களிலும் வேத பாராயணம் மற்றும் திவ்ய பிரபந்தம் பாடல்கள், கீர்த்தனைகள் பாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில்களுக்கு பஞ்சலோக சிலைகள் தேவைப்படுவது குறித்து வாரந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தகுதி யானவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏழுமலையான் சேவை பிரிவில் அதிக இளைஞர்கள் பங்கேற்பதற்கு திட்டம் வகுக்க வேண்டும்.
வெளியூர்களில் தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டப பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.