

பீகார் மாநிலம் முசாபர்பூரில்,பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மாவோயிஸ்டுகள் அவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்கையும் எரித்தனர்.
பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ராம் சூரத் ராய். இவருக்குச் சொந்தமாக முசாபர்பூரில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) இரவு பெட்ரோல் பங்கை சுற்றிவளைத்த ஆயுதம் தாங்கிய 20-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் அங்கிருந்த ஊழியர்களை கொடூரமாக தாக்கினர். பின்னர் பெட்ரோல் பங்குக்கும் தீ வைத்தனர். இதில் பங்க் வெடித்துச் சிதறியது.
பின்னர் அங்கிருந்து எம்.எல்.ஏ. ராயின் வீட்டுக்குச் சென்ற மாவோயிஸ்டுகள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். அப்போது வீட்டில் எம்.எல்.ஏ.வின் மனைவியும், குழந்தைகளும் இருந்துள்ளனர். சம்வம் குறித்து பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வருவதற்கு முன்னரே மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.