

உலகில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆடை என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட், சூட் பெற்றுள்ளது. இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கடந்த குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி ரூ.10 லட்சம் மதிப்பிலான கோட், சூட் அணிந்திருந்தார். ஆடை முழுவதும் ‘நரேந்திர தாமோதரதாஸ் மோடி’ என்று பிரதமரின் முழு பெயர் தையலிடப்பட்டிருந்தது.
அந்த ஆடை பின்னர் ஏலம் விடப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் படேல், பிரதமர் மோடியின் ஆடையை ரூ.4.31 கோடிக்கு ஏலம் எடுத்தார். அந்தத் தொகை கங்கை நதி தூய்மைப் பணிக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் உலகில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆடை என்ற பெருமையை பிரதமர் மோடியின் கோட், சூட் பெற்றுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை கின்னஸ் அமைப்பு வழங்கியுள்ளது.