

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான 3 வழக்குகளில், ஜார்க் கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் ஜாம்ஷெட்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஜார்க் கண்ட் மாநில பாஜக தலைவராக இருந்த ரகுவர் தாஸ் மற்றும் 12 பேர் மீது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் வரு கையை ஒட்டி, பிஸ்துபுர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் கட்சிக் கொடியை ஏற்றியதுடன் பேனர் வைத்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஜி.கே.திவாரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, ரகுவர் தாஸ் நேற்று நீதிபதி முன்பு நேரில் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக தாஸ் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எஸ்.என்.லாமே முன்பு தாஸ் நேற்று ஆஜரானார். -