

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தமுறை பெண் நட்சத்திரப் பிரச்சாரகர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் தவிர மற்ற கட்சிகளின் பிரச்சாரக் களத்தில் பெண்கள் அதிகரித் துள்ளனர்.
உ.பி. சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை தேர்தல் நடைபெறுகிறது. இதன் பிரச்சாரக் களம் ஆளும் சமாஜ்வாதி, அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், எதிர்க் கட்சிகளான பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா ஆகியவற்றால் சூடாகியுள்ளது. வழக்கமாக இக்கட்சிகள் தங்களின் ஆண் அரசியல் தலைவர்களையே அதிகம் நம்பி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தன. ஆனால் இந்த முறை முதல்முறையாக அவை பெண் அரசியல் தலைவர்களையும் நம்பி களமிறங்கி உள்ளன. வேட்பாளர்களாக மட்டுமின்றி பிரச்சாரக் களத்திலும் பெண்கள் அதிகமாக ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.
பெண் பிரச்சாரகர்களை அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்துவதில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. வழக்கமாக இக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் சோனியா காந்தி மட்டும் நட்சத்திரப் பிரச்சாரகராக இருந்து வந்தார். ஆனால் இந்தமுறை அவர், தான் பிரச்சாரம் செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார். பிரியங்கா வழக்கம்போல் தனது தாய் சோனியா, தம்பி ராகுல் ஆகியோரின் மக்களவை தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்யவுள்ளார். இவரை உ.பி.யின் மற்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய வைக்க அம்மாநில காங்கிரஸார் முயன்று வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் அதன் தேசிய அரசியல் பெண் தலைவர்களான ஷீலா தீட்சித், மீரா குமார், நடிகை நக்மா, ஷோபா ஓஜா, குமாரி ஷெல்ஜா, விஜயலட்சுமி சாதோ ஆகியோர் புதிதாக நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரான நக்மா, கடந்த மக்களவை தேர்தலில் உ.பி.யின் மீரட் தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வி அடைந்தாலும் அவரது பிரச்சாரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
சமாஜ்வாதி கட்சி சார்பில், முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், முதல் முறையாக உ.பி. முழுவதிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார். இவருடன், சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன், எம்எல்சி சரோஜினி அகர்வால், முலாயமின் இரண்டாவது மருமகள் அபர்ணா யாதவ் ஆகியோரும் களம் இறங்க உள்ளனர். இதில் அபர்ணா, லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிடுகிறார். இக்கட்சியில் வழக்கமாக முக்கிய பிரச்சாரகராக இருந்த ஜெயப்பிரதா இந்தமுறை விலகி இருக்கிறார். இதற்கு அவரது அரசியல் குருவான அமர்சிங் சமாஜ்வாதியில் இருந்து நீக்கப்பட்டதே காரணம் ஆகும்.
பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ஸ்மிருதி இரானி, உமாபாரதி, மேனகா காந்தி, மக்களவை உறுப்பினர் ஹேமாமாலினி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பெண் நட்சத் திரப் பிரச்சாரகர்களாக உள்ளனர். இவர்களுடன் காங்கிரஸிலிருந்து வந்த மூத்த தலைவர் ரீட்டா பகுகுணா, லக்னோ கன்டோன் மென்ட் தொகுதியில் போட்டியிடு வதுடன் நட்சத்திரப் பிரச்சாரக ராகவும் இடம் பெற்றுள்ளார். இவர்களில் ஸ்மிருதி, கடந்த மக்களவை தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தியை கடுமையாக எதிர்த்து போட்டியிட்டவர்.
உ.பி.யில் இந்தமுறை ஏற்பட்டுள்ள மும்முனைப் போட்டியில் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி, பாஜக, பகுஜன் சமாஜ் ஆகியவை களத்தில் உள்ளன. இவற்றில் பகுஜன் சமாஜ் கட்சியில் மட்டும் வழக்கம்போல் ஒரே பெண் நட்சத்திரப் பிரச்சாரகராக அதன் தலைவர் மாயாவதி திகழ்கிறார். இக்கட்சி சார்பில் முதல் 3 கட்ட தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலில் மாயாவதியின் பெயர் மட்டுமே உள்ளது.