

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆன்லைனில் மனுக்கள் குவிகின்றன.
இக்கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
பொருளாதார நிபுணரான ராஜன், ரிசர்வ் வங்கி வட்டாரத்தில் ஜேம்ஸ் பாண்ட் என்றழைக்கப்படுகிறார். இவரது மூன்றாண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படலாம் என்று சிலரும், கிடைக்காது என்று சிலரும் கூறி வருகின்றனர்.
இந்த விஷயத்தில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ராஜனை நீக்க வலியுறுத்தியுள்ளார். இதனால் இந்த விவகாரம் மிகுந்த விவாதப் பொருளாகிவிட்டது.
ராஜனுக்கு பதவி நீட்டிப்பு அளிக்க வலியுறுத்தி ஆன்லைன் கையெழுத்து வேட்டையை சேஞ்ச்.ஓஆர்ஜி நிறுவனம் நடத்தியது. இதில் 60 ஆயிரம் பேர் ராஜனுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர். இதில் பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஷ் பலாரியா என்பவர் மேற்கொண்ட ஆன்லைன் கையெழுத்து மனுவில் 57 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுபோல தனி நபர்கள் நடத்திய கையெழுத்து இயக்கம் சார்ந்த மனு, இணையதளத்துக்கு இதுவரை 7 வந்துள்ளன.
ராஜன், பழமை பொருளாதார சித்தாந்தத்தில் இருப்பவர் என்பதால் அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கக் கூடாது என்று கூறப்பட்ட ஆன்லைன் மனுவில் 15 பேர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர்.