

தேர்தல் ஆணைய உச்சவரம்பை மீறி பிரச்சார செலவுகள் செய்ததாக பாஜக வேட்பாளர்கள் இருவர் தனித்தனியே தொடர்ந்த வழக்கில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில், பிரச்சாரத்துக்காக வேட்பாளர்கள் தலா ரூ.14 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் புதுடெல்லி தொகுதியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் ரூ. 94.80 லட்சம் செலவு செய்ததாக இத் தொகுதியில் தோல்வியடைந்த பாஜக வேட்பாளரும் டெல்லி மாநில பாஜக முன்னாள் தலைவருமான விஜேயந்தர் குப்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு நீதிபதி விபின் சாங்கி முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இதே போன்ற புகாரை கூறி, டெல்லி மாளவியா நகர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் வெற்றி பெற்ற தற்போதைய சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இத் தொகுதியில் தோல்வி யடைந்த பாஜக வேட்பாளரும், டெல்லி முன்னாள் மேயருமான ஆர்த்தி மெஹ்ரா இந்த வழக்கை தொடுத்தார்.
இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜே.எஸ்.சிஸ்தாணி, 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு சோம்நாத் பாரதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். தேர்தல் செலவு உச்சவரம்பை மீறியதால் இருவரையும் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இரு வழக்குகளும் பிப்ரவரி 25-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றன.